தினகரன் 30.09.2010
டிஜிட்டல் பேனர் கட்டுப்படுத்துவதில் அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது
சென்னை, செப்.30: டிஜிட்டல் பேனர் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை நகரில் உள்ள நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் வைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும் அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி, சென்னை மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். வழக்கை உயர்நீதிமன்றம் விசாரித்து, டிஜிட்டல் பேனர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் முருகேசன், ராஜேந்திரன் ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர்.
அப்போது, அரசு சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன் ஆஜராகி, தலைமை செயலாளர் மாலதி சார்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தலைமை செயலாளர் தலைமையில் தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சட்டத்துறை செயலாளர், சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோர் சேர்ந்து டிஜிட்டல் பேனர்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த 14ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
டிஜிட்டல் பேனர்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இந்த திருத்தத்துடன் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டு, இந்த சட்ட திருத்தம் நவம்பர் மாதம் நடக்கும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். டிஜிட்டல் பேனர்களை 5 நாட்கள் மட்டும் வைத்திருக்க அனுமதி பெற ஒரு ஏஜென்சியை அரசே உருவாக்க உள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பேனர் விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், “அரசின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. எனவே, இதன் அடுத்த கட்ட விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.