தினமலர் 27.08.2010
டெங்கு, சிக்–குன் குனியா காய்ச்சல்: கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை
மதுரை:””மதுரையில் பரவும் டெங்கு மற்றும் சிக்–குன் குனியா காய்ச்சலுக்கு காரணமான கொசுவை ஒழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது,” என்று நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.மதுரை நகரிலும் மாவட்டத்திலும் சமீப காலமாக டெங்கு மற்றும் சிக்–குன் குனியா காய்ச்சல் அதிகம் பரவுகிறது. இதற்கு காரணமான கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மாநகராட்சி கூட்டங்களில், பல்வேறு கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பின. கொசுக்களை கட்டுப்படுத்தும் மருந்து, மாநகராட்சி “ஸ்டாக்‘ இல்லை என்ற புகாரும் எழுந்தது.
இது குறித்து நகர்நல அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது:நகரில் வில்லாபுரம், புதூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் கொசுக்களின் இனப்பெருக்க காலம். எனவே, தற்போது கொசுக்களின் உற்பத்தி அதிகம் உள்ளது. இதைத் தடுக்க டெட்ராமித்ரின் என்ற புகை மருந்து அடிக்கப்படுகிறது. கழிவு நீர் தேங்கிய இடங்களில் “அபேட்‘ என்ற மருந்து ஊற்றப்படுகிறது. இடையில் இம்மருந்து, “ஸ்டாக்‘ இல்லாமல் இருந்தது. இப்போது மருந்து வந்துவிட்டது.அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளிலும், காய்ச்சல் பாதிக்கப்பட்டு வருவோரிடம் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. டெங்கு, சிக்–குன் குனியா பாதிக்கப்பட்டிருந்தால், அதற்குஉரிய சிகிச்சை தரப்படுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
அறிகுறிகள் என்ன: டெங்கு ஏற்பட்டால், குறிப்பிட்ட அறிகுறியாக, அதிக காய்ச்சல், கடும் தலைவலி, கண்ணுக்குள் வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். பாதிக்கப்பட்டவரால் எழுந்து நடக்க முடியும். சிக்–குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டால், காய்ச்சலுடன், உடலின் சிறு மூட்டுகள் கூட வலிக்கும். எழுந்து நடக்க முடியாது. இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக, ரத்த பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.