தினகரன் 31.08.2010
டெங்கு பரவி வரும் நிலையில் கொசு மருந்து தெளிப்பு ஊழியர் ஸ்டிரைக் அறிவிப்பு
புதுடெல்லி,ஆக.31: டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாநகராட்சியில் பணிபுரியும் கொசு உற்பத்தி தடுப்பு ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் நகரமே கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. நாளுக்கு நாள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800ஐ தாண்டி விட்டதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வீட்டுக்கு வீடு சென்று கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை மாநகராட்சியின் 3,200 தற்காலிக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் பணியை நிரந்தரம் செய்யக்கோரி செப்டம்பர் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.டெல்லியில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் காமன்வெல்த் விளையாட்டு போட் டிகளும் தொடங்க இருக்கின்றன. இந்த சமயத்தில் கொசு உற்பத்தி தடுப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “மாநகராட்சியில் இப்போதுள்ள நிதி நெருக்கடியில் 3,200 கொசு தடுப்பு ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய இயலாது. ஏற்கனவே மாநகராட்சியில் பணியாற்றிவரும் சுமார் 7,000 துப்புரவு தொழிலாளர்கள் சமீபத்தில்தான் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்” என்றார்.
மேயர் எச்சரிக்கை மாநகராட்சி மேயர் சகானி கூறியதாவது:
டெங்கு காய்ச்சலால் டெல்லியே பரிதவித்து வரும் போது, கொசு மருந்து தெளிப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நல்லதல்ல. காமன்வெல்த் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இப்போது வேலை நிறுத்தம் செய்வது நாட்டுக்கு இழைக்கும் துரோகம். அதனால், வேலை நிறுத்த அறிவிப்பை கொசு மருந்து தெளிப்பு ஊழியர்கள் கைவிட வேண்டும். இதை ஏற்காமல் வேலை நிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். கொசு மருந்து தெளிப்பு பணியில் சேர தினமும் பலரிடமிருந்து விண்ணப்பங்கள் வருகிறது. அதனால், புதியவர்களை நியமனம் செய்வது ஒரு பிரச்னையாக இருக்காது. காமன்வெல்த் போட்டி முடிந்த பின், கொசு மருந்து தெளிப்பு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு சகானி கூறினார்.
டெங்குவுக்கு சிறுவன் பலி
டெங்கு காய்ச்சலுக்கு 11 வயது சிறுவன் நேற்று பலியானான். இதையடுத்து, டெங்குவுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் 63 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களையும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 863 ஆக உயர்ந்தது. இதற்கிடையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அனிகேஷ் என்ற 11 வயது சிறுவன் நேற்று இறந்தான். இவனையும் சேர்த்து டெங்குவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, “மாநகராட்சியில் இப்போதுள்ள நிதி நெருக்கடியில் 3,200 கொசு தடுப்பு ஊழியர்களின் பணியை நிரந்தரம் செய்ய இயலாது. ஏற்கனவே மாநகராட்சியில் பணியாற்றிவரும் சுமார் 7,000 துப்புரவு தொழிலாளர்கள் சமீபத்தில்தான் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்” என்றார்.