தினகரன் 11.08.2010
டெல்லியில் குவிந்து கிடக்கும் கட்டுமான கழிவுகள் விரைவில் அகற்றப்படும்
புதுடெல்லி, ஆக. 11: “டெல்லியின் பல பகுதிகளில் குவிந்து கிடக்கும் கட்டுமானக் கழிவுகள் விரைவில் அகற்றப்படும்” என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.
காமன்வெல்த் போட்டிகளை முன்னிட்டு, டெல்லியில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், கல், மண், கம்பிகள், மரச்சாமான்கள், கட்டிட இடிபாடுகள் என கட்டுமானக் கழிவுகள் பல இடங்களிலும் குவிந்து கிடக்கிறது.
இதனால் நகரின் அழகு கெடுவதோடு, பாதசாரிகளுக்கும் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. “கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ள மாநகராட்சி, நகராட்சி கவுன்சில், டிடிஏ, டி.எம்.ஆர்.சி. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலைகளில் கிடக்கும் கட்டுமானக் கழிவுகளை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் அகற்றி விட வேண்டும்” என்று முதல்வர் ஷீலா தீட்சித் கெடு விதித்திருந்தார்.
அந்தக் கெடு நேற்று முடிந்ததால், “கட்டுமானக் கழிவுகள் இன்றைக்குள் அகற்றப்பட்டு விடுமா?” என்று ஷீலா தீட்சித்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
ஒரு சாலையை அமைக்கும்போதோ அல்லது ஒரு கட்டிடத்தை கட்டும்போதோ கழிவுகள் ஏற்படுவது சகஜம்தான். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கட்டுமானக் கழிவுகள் கிடக்கின்றன. இதுவரை, ஏராளமான கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மாநில அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் நடக்கும் பணிகளில் எந்த கட்டுமானக் கழிவுகளும் இல்லை. மற்ற அமைப்புகளின் சார்பில் நடக்கும் பணியிடங்களில்தான் கழிவுகள் கிடக்கின்றன. அந்த கட்டுமானக் கழிவுகளும் விரைவில் அகற்றப்பட்டு விடும்.
காமன்வெல்த் போட்டி தொடர்பான முன்னேற்பாடுகள் பற்றி ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புகின்றன. பணிகள் முடிய மிகவும் காலதாமதமாகும் என்று கூறுவதை விடுத்து, சரியான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மாநில அரசின் சார்பில் நடைபெறும் முக்கியமான பணிகள் அனைத்தும் குறித்த நேரத்துக்குள் முடிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார்.
தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா கூறுகையில், “இதுவரை 80 ஆயிரம் மெட்ரிக் டன் கட்டுமானக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆர்சி) சார்பில் நடக்கும் பணிக்காக பள்ளங்கள் தோண்டுவதால், நகராட்சிக் கவுன்சில் பகுதிகளில் இன்னமும் கட்டுமானக்கழிவுகள் அகற்றப்படவில்லை” என்றார்.