தினகரன் 20.11.2010
டெல்லியுடன் செய்து கொண்ட குடிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை அரியானா மதிக்கவில்லை
புதுடெல்லி, நவ. 20: டெல்லியுடன் செய்து கொண்ட குடிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை அரியானா மாநில அரசு மதிக்கவில்லை என்று முதல்வர் ஷீலா தீட்சித் குற்றம் சாட்டினார். “அரியானாவில் தண்ணீர் நிரம்பி வழிந்து வீணாவதை விட, அதை டெல்லிக்கு குடிநீராக வழங்க முன்வர வேண்டும்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொழில்துறை அமைப்பான அசோசேம் சார்பில் டெல்லியில் நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் முதல்வர் ஷீலா தீட்சித் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லிக்கு குடிநீரை வழங்குவது தொடர்பாக அரியானா அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் டெல்லிக்கு தண்ணீரை கொண்டு வருவதற்காக தனியாக ஒரு கால்வாய் அமைக்க
ரூ300 முதல் 400 கோடி அரியானா அரசுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தப்படி அரியானா அரசு குடிநீரை டெல்லிக்கு வழங்கவில்லை. குடிநீரை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை அரியானா மதிக்கவில்லை.
அரியானாவில் தண்ணீர் நிரம்பி வழிந்து வீணாவதைவிட, அதை டெல்லிக்கு வழங்க அம்மாநில அதிகாரிகள் முன்வரலாம். கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் நகர்ப்புறங்களுக்கு தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான குடிநீரை எப்படி வழங்கப் போகிறோம் என்பது டெல்லி அரசில் உள்ள ஒவ்வொருவர் முன்னால் உள்ள சவாலாகும்.
ஒற்றுமையாகவும், பிறருடன் பகிர்ந்து கொண்டும் வாழாவிட்டால் வருங்காலத்தில் எல்லா விஷயங்களுமே பிரச்னையாகிவிடும். இது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை. இந்த பிரச்னை தீரும் வகையில் தண்ணீரை சேமிக்கவும், பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் புதிய கொள்கை ஒன்றை மத்திய அரசு வகுக்க வேண்டும். அதனால் ஒட்டுமொத்த தேசமே பயனடையும்.
அதேவேளையில், கார்களை கழுவவும், மரங்களுக்கு பாய்ச்சவும் என குடிநீரை அளவுக்கதிகமாக வீணாக்காமல் மக்கள் விவேகத்துடன் சிக்கமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் ஷீலா தீட்சித் பேசினார்.