தினமலர் 09.12.2010
டோல்கேட்டில் கண்காணிப்பு இல்லாததால் இழப்பு: கண்டு கொள்ளாத நகராட்சி அதிகாரிகள்
கொடைக்கானல்: கொடைக்கானல் நுழைவு வாயிலிலுள்ள டோல்கேட்டில் கண்காணிப்பு காமிராக்கள் இல்லாததால், தினமும் பல ஆயிரம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே நகராட்சி கட்டுப்பாட்டில் “டோல்கேட்‘ உள்ளது. இந்த வழியாக கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளிடம் டூரிஸ்ட் பஸ்சிற்கு ரூ.125, அரசு பஸ்சிற்கு ரூ.100, கார் ரூ.40, இருசக்கர வாகனத்திற்கு ரூ.10 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. காலை 6 முதல் மதியம் மணி 2, மதியம் 2முதல் இரவு மணி10, இரவு 10 முதல் மறுநாள் காலை மணி6 வரை என தினசரி மூன்று ஷிப்களில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரமும், வார விடுமுறை, தொடர் அரசு விடுமுறை நாட்களில் மும்மடங்கு வசூலாகும்.
குறிப்பாக வரும் வெளி மாநிலத்திலிருந்து வரும் பயணிகளிடம், டிக்கெட் கொடுக்காமல் பணத்தை வாங்கிவிட்டு அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த உயர் அதிகாரியிடம் இதுபோன்று ஊழியர்கள் பணம் வசூலிக்க அவர் மேலிடத்தில் புகார் செய்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரச்னையில் தலையிட்டு தீர்வு கண்டனர். நுழைவு கட்டணம் முறைப்படி வசூல் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க நகராட்சித்தலைவர் ,கமிஷனர் அறை, வருவாய் ஆய்வாளர் அறையில் கணினி பொருத்துவதற்காக திட்டம் வகுக்கப்பட்டு, இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆண்டுதோறும் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.