தினகரன் 09.09.2010
தங்கவயல் நகராட்சி கமிஷனர் யார்? குழப்பத்துக்கு தீர்வு கிடைத்தது
தங்கவயல், செப்.9: தங்கவயல் நகரசபை கமிஷனர் எர்ரப்பாவா அல்லது தாட்சாயணியா என்ற குழப்பம் மக்களிடம் ஏற்பட்டது. நேற்று எர்ரப்பாவின் இடமாற்றத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததற்கான நகல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து கமிஷனர் யார் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.
தங்கவயல் நகரசபை கமிஷனர் எர்ரப்பா கடந்த 3ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் நகரசபை கமிஷனராக பொறுப்பேற்குமாறு மாவட்ட கலெக்டர் பிரபாகரன், பங்காருப்பேட்டை தாசில்தார் தாட்சாயணிக்கு உத்தரவிட்டார். அவர் கடந்த 6ம் தேதி அவர்பொறுப்பேற்றார். அடுத்த நாள் காலையில் இடமாற்றம் செய்யாமல் இருக்க கோர்ட்டில் தடை உத்தரவு வாங்க¤ வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்து வழக்கம்போல எர்ரப்பா அலுவலக பணிகளை செய்தார். பின்னர் மாலையில் அலுவலக அறையை பூட்டிவிட்டு சாவியை எடுத்து சென்றார்.
இந்நிலையில், நேற்று காலை தாட்ச்சாயிணி தங்கவயல் நகரசபை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கமிஷனர் அறை பூட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பொறியாளர் அறையில்¢அமர்ந்து தன்னுடைய வேலையை துவங்கினார். இதனை பார்த்து கொண்டிருந்த நகரசபை ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து நகரசபை தலைவர் தயாளன் கூறியதாவது: தன்னை இடமாற்றம் செய்ய கோர்ட்டில் தடைவாங்கி உள்ளதாக கமிஷனர் கூறுகிறார். ஆனால் கோர்ட் உத்தரவு நகலை அவர் நகரசபைக்கு கொடுக்கவில்லை என்றார்.இதற்கிடையில் பேக்ஸ் மூலம் கமிஷனர் எர்ரப்பாவின் இடமாற்றத்திற்கு தடைவிதித்த கோர்ட் உத்தரவு வந்தது.