தினமணி 24.08.2010
தஞ்சையை மாநகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல்
தஞ்சாவூர், ஆக. 23: தஞ்சை பெரிய கோயில் 1000-மாவது ஆண்டு விழாவையொட்டி, தஞ்சாவூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வர்த்தகர் கழகப் பொதுச் செயலர் வெள்ளைச்சாமி நாடார் வெளியிட்ட அறிக்கை:
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலின் 1000-மாவது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த உள்ள தமிழக அரசுக்கு நன்றி. தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் சாலையில் ராஜராஜ சோழனால் அமைக்கப்பட்டுள்ள சமுத்திரம் ஏரி தூர்ந்து, ஆக்கிரமிப்புகளால் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்துள்ளது. நிலத்தடி நீர்ஆதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஏரியை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
மேலும், இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்படி செய்து, படகு சவாரி அமைத்து, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தஞ்சாவூர் – திருவையாறு இடையிலான பழைய சாலையை சீரமைக்க வேண்டும். தஞ்சாவூர் பெரிய கோயில் முன் தமிழக அரசு சார்பில் கைத்தறி, கைவினைப் பொருள்களாகிய தட்டு, வீணை போன்றவற்றை விற்பனை செய்யும் சிற்றங்காடியை திறக்க வேண்டும். தாலுகா காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து அவற்றிற்கு புதிய எல்லைகளை வரையறுக்க வேண்டும்.
0 தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையை விரிவுப்படுத்த வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தை சீரமைக்க நிதி ஒதுக்க வேண்டும். தஞ்சாவூர் கிளைச் சிறைச் சாலை கட்டடங்களை சீரமைத்து புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும். புதுஆற்றங்கரையை நவீன முறையில் சீரமைத்து இருபுறமும் பூங்கா அமைத்துப் பராமரிக்க வேண்டும்.