தினகரன் 11.08.2010
தடுப்பு நடவடிக்கைகளை மீறி பன்றிக்காய்ச்சல், டெங்கு வேகமாக பரவுகிறது
புதுடெல்லி, ஆக. 11: டெல்லியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. புதிதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் 25 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
டெல்லியில் கட்டுக்குள் இருந்த பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 172 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இதுவரையில் 9,895 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற் றுள்ளனர்.
இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “பன்றிக்காய்ச்சலால் மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது” என்றார்.
இதேபோல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலும் 8 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய ரத்தமாதிரி பரிசோதிக்க ப் பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.
மாநகராட்சி சுகாதார அதிகாரி என்.கே.யாதவ் கூறுகையில், “இந்த சீசனில் இதுவரையில் 121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்காக மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது. இதேபோல் நவீன இயந்திரம் மூலம் புகையும் போடப்படுகிறது” என்றார்.
மாநகராட்சி பகுதியில் மட்டும் 77 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நகராட்சி கவுன்சில் பகுதியில் 22 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதற்கிடையே, கொசுக்கள் பெருகும் வகையில் தங்கள் பகுதிகளில் நீரை தேங்கவிட்டவர் களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி வருகிறது