தினகரன் 24.05.2010
தடையில்லா சான்று வழங்காததால் பாதாள சாக்கடை திட்டம் தொடங்குவதில் தாமதம்
தாம்பரம், மே 24: வருவாய் துறையினர் தடையில்லா சான்றிதழ் வழங்காததால், புறநகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம், உள்ளிட்ட பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்ட பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. பெருங்களத்தூரில் ரூ.4.781 கோடியிலும், செம்பாக்கத்தில் ரூ.6.182 கோடியிலும், பீர்க்கன்காரணையில் ரூ. 2.129 கோடியிலும், மாடம்பாக்கத்தில் ரூ.5.445 கோடியிலும் பணிகள் நடைப்பெற உள்ளன.
இதற்காக, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் மேற்பார்வையில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக, ஒவ்வொரு பேரூராட்சி பகுதியில் கழிவுநீர் உந்துநிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இந்த இடத்தில் கழிவுநீர் உந்துநிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வருவாய் துறையினர் தடையில்லா சான்றிதழை இதுவரை வழங்கவில்லை. அனுமதி கோரி மனு கொடுத்து, பல மாதங்கள் ஆகியும் இன்னும் வழங்கப்படாததால், பாதாள சாக்கடை திட்ட பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திட்ட செயல் அலுவலர்கள் கூறுகையில், “திட்டபணி துவங்க அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வருவாய் துறையினரிடம் தடையில்லா சான்று வேண்டி கடந்த ஜனவரி மாதம் மனு செய்திருந்தோம். இன்னும் வழங்கப்படவில்லை. ஏதாவது காரணம் கூறி தாமதம் செய்கின்றனர்” என்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, திட்டப்பணி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.