தினகரன் 25.11.2010
தடை இல்லா சான்று பெற மும்பை மாநகராட்சியிடம் போலி கடிதம் சமர்ப்பிப்பு
மும்பை, நவ. 25: மும்பை மாநகராட்சியிடம் தடை இல்லா சான்று பெற, ராணுவ உயரதிகாரியின் கையெழுத்துடன் கூடிய போலி கடிதத்தை கொடுத்து, தடை செய்யப்பட்ட பகுதியை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டது தொடர்பாக, போலீசிடம் ராணுவம் புகார் அளித்துள்ளது.
மலாடில் உள்ள மத்திய தீர்ப்பாயம் டெப்போ சுற்றுச்சுவர் அருகே உள்ள 10 மீட்டர் நிலப்பரப்பு தடை செய்யப்பட்ட பகுதியாகும். ரோந்து பணி மேற்கொள்ள ராணுவத்தினர் இந்த பகுதியை பயன்படுத்த மட்டுமே அனுமதி உள்ளது. பொதுமக்கள் இப்பகுதியை பயன்படுத்த கூடாது.
ஆனால், இந்த பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த ராணுவம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறி, ராணுவ உயரதிகாரியின் போலி கையெழுத்துடன் கூறிய கடிதத்தை மும்பை மாநகராட்சியிடம் சமர்ப்பித்த, அடையாளம் தெரியாத நபர், சம்மந்தப்பட்ட பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த ஒப்புதல் பெற்றார்.
இது குறித்து மத்திய தீர்ப்பாயம் டெப்போ பாதுகாப்பு அதிகாரி விவேகானந்த் காஞ்சி கூறுகையில், “தடை செய்யப்பட்ட பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கி ராணுவ அதிகாரி கடிதம் எதுவும் வழங்கவில்லை. ராணுவ அதிகாரியின் போலி கையெழுத்துடன் கூடிய கடிதம் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
ராணுவம் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ், அடையாளம் தெரியாதவர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.