தினமலர் 13.01.2010
தடை செய்யப்பட்ட ‘கேரிபேக்‘ திடீர் ஆய்வு நடத்த ஆலோசனை
ஊட்டி : “தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் அதிகரிக்கப்பட்டுள்ள உபயோகிப்பதை தடுக்க, முன்னறிவிப்பின்றி அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள மனு:
ஊட்டி மத்திய பஸ் நிலையம் தூய்மை பகுதியாக அறிவிக்க வேண்டும்; தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தி சுகாதாரத்தில் அக்கறை காட்ட வேண்டும்; ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் வருவாய் பணியாளர் குடியிருப்பு கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்; நகராட்சி மார்க்கெட் தூய்மை பகுதியாக அறிவிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் அதிகமாகஉபயோகிப்பதை தடுக்க முன்னறிவிப்பின்றி அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்;
நகரில் சுற்றித்திரியும் மனநோயாளிகள் கட்டுப்படுத்த உரிய நிதியோ, அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வாகன வசதி சமூக நலத்துறைக்கு வழங்க மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர்; ஓட்டலில் மீதமாகும் உணவு பொருட்கள் கொட்டப்படுவதும், மனநோயாளிகள் அந்த உணவை உண்கின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையத்தில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தி காற்றோட்டமான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு ஜனார்தனன் கூறியுள்ளார்.