தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்!
ஜெகதளா பேரூராட்சியில் 5 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் 40 மைக்ரான் எடைக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தடையை மீறி விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பொருள்களை கைப்பற்ற மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கின் உத்தரவின்பேரில், அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது கோடை சீசன் நேரமாக உள்ளதால் 40 மைக்ரான் எடைக்கு குறைவாக உள்ள அனைத்து வகையான பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கவர்கள், கப்புகள் மற்றும் பிளாஸ்டிக்கால் மூடப்பட்ட பேப்பர் பிளேட்டுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆட்சியரின் நேர்முக உதவியர் (சிறுசேமிப்பு) அபுதா ஹனீப் தலைமையில் ஜெகதளா பேரூராட்சிக்கு உள்பட்ட அருவங்காடு பஜார், ஜெகதளா சாலை ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திடீர் சோதனையில் 7 கடைகளில் இருந்து 5 கிலோ 200 கிராம் பிளாஸ்டிக் கவர்கள், பேப்பர் பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டன.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜே.சரவணன் மற்றும் அலுவலர்கள் பாலகிருஷ்ணன், பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர். தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.