தினமலர் 02.08.2010
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் ஆக்கிரமிப்பு
தண்டையார்பேட்டை : தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தை ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட திட்டம் தாமதமாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மேம்பாலத்தின் கீழ் நாளுக்குநாள் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன.தண்டையார்பேட்டை – மணலி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையை அடைவதற்கு வசதியாக சென்னை–கும்மிடிப்பூண்டி ரயில்வே லைனுக்கு மேல் வைத்தியநாதன் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.பழமை வாய்ந்த இந்த மேம்பாலத்தின் வழியாக கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு செல்லும் மாநகராட்சி வாகனங்கள், தண்டையார்பேட்டையில் உள்ள எரிபொருள் நிறுவனங்களுக்கு செல்லும் டேங்கர் லாரிகள் அதிகளவில் பயணித்து வருகின்றன.ஒரு மேம்பாலம் கட்டப்பட்டால் அதனை குறிப்பிட்ட ஆண்டிற்கு பிறகு புனரமைக்க வேண்டும். ஆனால் வைத்தியநாதன் மேம்பாலம் புனரமைக்கப்படாமலும், முறையான கவனிப்பு இல்லாமலும் இருந்து வருகிறது.இதனால் பழமையான இப்பாலத்தின் தடுப்பு சுவர்கள், தூண்கள் உறுதியிழந்து வருகின்றன. ரயில்வே லைன், வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் மறைப்பதற்காக கட்டப்பட்ட மேம்பால தடுப்பு சுவர்களில் ஓட்டைகள் விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.இது ரயில்கள் செல்லும் போது இடிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த மேம்பாலத்தை புனரமைக்கப் போவதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.மாதங்கள் கடந்த நிலையில் அதற்கான எவ்வித பணியும் இதுவரை துவங்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க டேங்கர் லாரிகள், மாநகராட்சியின் குப்பை லாரிகள் மட்டுமின்றி அதிக பாரங்கள் ஏற்றப்பட்ட கனரக வாகனங்களும் இந்த மேம்பாலத்தில் தடையை மீறி பயணித்து வருகின்றன.இதனால் இப்பாலம் மேலும் பலம் இழந்து விரைவில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பல்வேறு ஆக்கிரமிப்புகளும் நடந்து வருகின்றன.
தண்டையார்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி சாலையை இப்பகுதி மக்கள் முன்பு அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.ஆனால், அங்கு கட்டட பணிகளுக்காக செங்கற்கள் உடைப்பது, சாணம் தட்டுவது, வாகனங்களை நிறுத்துவது போன்ற ஆக்கிரமிப்புகள் தற்போது அதிகளவில் உருவாகியுள்ளன. இதனால் ரயில் நிலையத்திற்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இது மட்டுமின்றி மாலை நேரங்களில் அங்கு முகாமிடும் போதைப் பிரியர்கள் அந்த இடத்தை “ஓபன் பார்‘ ஆக மாற்றி வருகின்றனர். குடிபோதையில் ரயில் நிலையத்திற்கு வரும் பெண்களிடம் அவர்கள் வம்பிழுத்து வருகின்றனர்.இதனால் ரயில் நிலையத்திற்கு செல்லும் பெண் பயணிகள் அவ்வழியாக செல்வதை தவிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இனியாவது இந்த மேம்பால புனரமைப்பு பணியை மாநகராட்சி நிர்வாகம் விரைவில் துவங்க வேண்டும்.மேலும், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியை கைப்பற்றி அதை பயணிகளுக்கு பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.