தினமலர் 15.04.2010
தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்:நகராட்சி அதிகாரிகள் அதிரடி
கூடலூர் :கூடலூர் நகரிலுள்ள கடையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, காலாவதியான தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.கூடலூர் நகரமன்றக் கூட்டத்தில், கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்ட பாட்டில் தண்ணீர் காலாவதியானது தெரியவந்த நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. செயல் அலுவலர் ரஜினி உத்தரவின் படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் கக்கமல்லன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், பாட்டில் தண்ணீர் வினியோகித்த, கோழிக்கோடு சாலையில் உள்ள கடையில் ஆய்வு நடத்தினர்.விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான தண்ணீரை பாட்டில்களை பறிமுதல் செய்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். ‘விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து விற்பனை செய்ய வேண்டும்; காலாவதியான பொருட்களை ஸ்டாக் வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்‘ என, அதிகாரிகள் எச்சரித்தனர். கூடலூர் பகுதிகளில் உள்ள கடைகளில் இதுபோன்ற தண்ணீர் பாட்டில்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், ஆய்வை விரிவுபடுத்தி, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.