தண்ணீர் வீணானால் லாரி ஓட்டுனருக்கு அபராதம்
சென்னை:நீர்தேக்க தொட்டி நிலையங்களில், லாரியில் தண்ணீர் நிரப்பும்போது, கவன குறைவாக இருக்கும் ஓட்டுனர் மீது அபராதம் விதிக்கப்படும் என, குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடைக் காலம் நெருங்கி விட்டதால், தண்ணீர் தேவை அதிகரிக்கும்.
சென்னையில், குடிநீர் வாரிய வாகனங்கள் மற்றும் ஒப்பந்த லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நீர்தேக்க தொட்டி நிலையங்களில் இந்த லாரிகள் நிரப்பப்படுகின்றன.
அப்போது லாரி ஓட்டுனர் மற்றும் அவர்களது உதவியாளர்களின் கவன குறைவால் தண்ணீர் வீணாவது தொடர்கிறது.
அதை தடுக்கும் பொருட்டு, கவன குறைவாக செயல்படும் ஓட்டுனர் மீது அபராதம் விதிக்க குடிநீர் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து, நீர்தேக்க தொட்டி நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகையில்,
- தண்ணீர் நிரப்பும் போது, குழாய் வால்வுகள் சரியாக மூடப்படவில்லை என்றால்…
- லாரியில் உள்ள வால்வுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால்…
- குழாய் வால்வை திறந்து கை, கால் கழுவுதல், குளித்தலில் ஈடுபட்டால்…
- தண்ணீர் நிரப்பும் குழாயில் பொருத்தப்பட்டுள்ள தொங்கு குழாயை அகற்றினால்…
- உதவியாளரை (கிளீனர்) வைத்து லாரி ஓட்டினால்…
சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு 100 முதல் 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, குறிப்பிடப்பட்உள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “”லாரியில் தண்ணீர் வீணாவதை பொதுமக்கள் பார்த்தால், மண்டல பகுதி பொறியாளரிடம் புகார் தெரிவிக்கலாம்,” என்றார்.