தினமணி 1.10.2009
தனியாருக்கு வழங்கிய துப்புரவுப் பணி ஒப்பந்தம் ரத்து
வேலூர், செப். 30: வேலூரில் துப்புரவு பணிக்காக தனியாருக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக வேலூர் மாமன்ற கூட்டத்தில் மேயர் ப.கார்த்திகேயன் அறிவித்தார்.
வேலூர் மாமன்றக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.
நகரில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் நிலை மாறுமா என்று உறுப்பினர் பி.பி. ஜெயப்பிரகாஷ் கேள்வி எழுப்பினார்.
வேலூரில் குடிநீர் வழங்கும் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது மழை பெய்வதால் இந்நிலை விரைவில் மாறும். மேட்டூர் அணை அருகிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 7 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 கிராமங்கள் பயன்பெறவுள்ளன. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் தடை நகரில் எந்த அளவில் செயல்பாட்டில் உள்ளது என்று தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று உறுப்பினர் கோபி கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த மேயர், இன்னும் பறிமுதல் நடவடிக்கைகள் தொடங்கவில்லை, டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேலூரின் குடிநீர் ஆதாரமான ஓட்டேரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டது. இதனால் மழை பெய்தும், ஏரிக்கு தண்ணீர் வரவில்லை என்று சண்முகம் குற்றம்சாட்டினார். ஏரிப்பகுதியில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று மேயர் தெரிவித்தார்.
துப்புரவு பணிகளை தனியார் சரியாக செய்வதில்லை என்று உறுப்பினர் பாலசுப்பிரமணியம் தெரிவித்த புகாருக்கு பதில் அளித்த மேயர், “தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் புதன்கிழமையுடன் (செப்டம்பர் 30) ரத்து செய்யப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் மாநகராட்சி ஊழியர்களே பணிகளை மேற்கொள்வர் என்றார்.
நீரிழிவுமற்றும்ரத்தஅழுத்தத்திற்கான மாத்திரைகளை மாநகராட்சி மருத்துவமனைகளிலும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உறுப்பினர் பிச்சமுத்து கோரிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் வெளிநடப்பு: புதிய பஸ்நிலையத்தில் எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்டு வரும் அலங்கார வளைவு பணியை நிறுத்தியது மற்றும் சேதப்படுத்தியது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் சீனிவாசகாந்தி பேசும்போது மன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் சீனிவாசகாந்தி காங்கிரஸ் உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். அரசு உத்தரவிட்டால், மாமன்றத்தின் முறையான அனுமதி பெற்று அலங்கார வளைவு கட்டுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று மேயர் அப்போது கூறினார்.