தினமலர் 03.08.2012
தனியார் மூலம் தண்ணீர் வினியோகம் சுத்திகரிப்புக்கான உத்தரவாதமில்லை
ஊட்டி : “தனியார் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்த பின்பு பயன்படுத்த வேண்டும்,’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சி கமிஷனர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் லாரி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு,”தனியார் வாயிலாக வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,’ என்பதற்கான சான்றிதழ் நகராட்சி வாயிலாக வழங்கப்படுவதில்லை. எனவே, தனியார் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் சுகாதாரமானதாகவும், சுத்திகரிக்கப்பட்டதாகவும் உள்ளதா என்பதனை உறுதி செய்த பின்பு பயன்படுத்த வேண்டும். மேலும், குடிநீர் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்க குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு குடிக்க வேண்டும். இவ்வாறு சிவக்குமார் கூறியுள்ளார்.