தினமணி 23.09.2010
தனியார் வீட்டுமனைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு : நெல்லை மாநகராட்சி செயற் பொறியாளர் பணியிடை நீக்கம்
திருநெல்வேலி,செப்.22: திருநெல்வேலி தனியார் வீட்டுமனை விற்பனை நிறுவனத்துக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக எழுந்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகராட்சி செயற் பொறியாளர் (திட்டம்) லட்சுமிகாந்தனை, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.
திருநெல்வேலி தச்சநல்லூர் அருகே ஒரு தனியார் நிறுவனம் வீட்டுமனைகளை உருவாக்கி உள்ளது. இந்த வீட்டுமனைகள் மாநகராட்சி விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பு புகார் கூறப்பட்டு வந்தது.
குறிப்பாக இந்த வீட்டுமனைகள் வரைபட அனுமதி மற்றும் வீட்டு மனைக்கு தேவையான குடிநீர், சாலை, மின் விளக்கு, பூங்கா ஆகிய அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாமலேயே மாநகராட்சி அனுமதி வழங்கியதாக புகார் கூறப்பட்டது.
மேலும், தச்சநல்லூர் மண்டலத்தின் கீழ் உள்ள இந்தப் பகுதியில், அம் மண்டலம் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால், அந்த சான்றிதழை வாங்குவற்கு முன்பே மாநகராட்சி செயற்பொறியாளர் (திட்டம்) லட்சுமிகாந்தன், அங்குள்ள வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்கினாராம்.
இதேபோல மாநகராட்சி பல்வேறு விதிமுறைகளையும், சட்டங்களையும் மீறி அங்குள்ள வீட்டுமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டனவாம். இதனால், அந்த வீட்டுமனைக்கு அனுமதி வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தமிழக நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர், இதுகுறித்து 2 மாதங்களுக்கு முன்பு விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் உயர் அதிகாரிகள், லட்சுமிகாந்தன் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தினர். சில நாள்களுக்கு முன்பு விசாரணையின் அறிக்கையை உயர் அதிகாரிகள், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமாரிடம் அளித்தனர்.
இந்நிலையில், நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், லட்சுமிகாந்தனை பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.