தினத்தந்தி 15.06.2013
தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகளுக்காக புதிய எச்சரிக்கை பலகைகள் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டன

தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக நகரசபையின்
மூலம் 3 இடங்களில் புதிதாக எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டன.
ஆழமான பகுதி
அகில இந்திய புண்ணியதலமாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தமிழகம்
மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா
பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி
கடற்கரையில் உள்ள இடிந்துபோன கட்டிடங்களையும், முகுந்தராயர் சத்திரம்
கடற்கரையில் உள்ள நினைவு தூணையும் பார்த்து செல்கின்றனர்.
தனுஷ்கோடி கடல் பகுதி எப்போதும் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டு
வருவதுடன் ஆழமான கடல் பகுதியாகும். அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு
கருதி தனுஷ்கோடி கடல் பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தடையை மீறி கடல் பகுதியில் குளித்ததில் கடந்த 2 வருடங்களில் மட்டும்
இதுவரையில் 10–க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இறந்து போனார்கள்.
எச்சரிக்கை பலகைகள்
தனுஷ்கோடி கடல் பகுதியில் எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்க வேண்டும்
என்று ‘தினத்தந்தி’யில் பல முறை செய்திகள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில்
தற்போது தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் நகரசபை தலைவர்
அர்ச்சுனன், ஆணையாளர் கண்ணன் ஆகியோரது உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள்
தனுஷ்கோடி கடல் பகுதியில் இறங்கி குளிக்காமல் இருப்பதற்காக அவர்களுக்கு
தெரியும் வகையில் நகராட்சி சார்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3
மொழிகளில் எழுதப்பட்ட பெரிய அளவிலான எச்சரிக்கை தகவல் பலகைகள் 3 இடங்களில்
வைக்கப்பட்டன.
பயணிகள் பலர் எச்சரிக்கை தகவல் பலகையை படித்து விட்டு கடலில் இறங்காமல்
கடற்கரையிலேயே நின்று பார்த்துச் சென்றனர். பல வருடங்களுக்கு பிறகு
தனுஷ்கோடி கடற்கரையில் எச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.