தினமலர் 16.09.2010
தபால் மூலம் பிறப்பு சான்றிதழ்நேரடியாக அனுப்ப நடவடிக்கை
சேலம்: குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் செய்பவர்களின் வீடுகளுக்கு, சான்றிதழை தபால் மூலம் நேரடியாக அனுப்ப சேலம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் மாநகர பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தின் மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் அலைக்கழிக்கப்படுவதுடன், புரோக்கர்களின் பிடியில் சிக்கி கணிசமான தொகையை கப்பமாக செலுத்தி வருகின்றனர்.இதை தடுக்க, பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களின் வீடுகளுக்கு தபால் மூலம் நேரடியாக சான்றிதழை அனுப்பி வைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்துள்ளது.இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி கூறியதாவது:பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, நேரடியாக சான்றிதழ் வழங்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிறப்பு சான்றிதழ் கோருபவர்களிடம் அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுய விலாசத்துடன் கூடிய அலுவலக கவர் ஒன்று பெறப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் மாநகராட்சி மூலமேஅவர்கள் கொடுத்த முகவரிக்கு பிறப்பு சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும், என்று தெரிவித்தார்.