தினமலர் 17.04.2010
தமிழக நகராட்சி,மாநகராட்சி தொழிற்சங்களுடன் ஸ்வீடன் நாட்டு குழுவினர் நெல்லையில் கலந்துரையாடல்
திருநெல்வேலி:நெல்லையில், நகராட்சி, மாநகராட்சி தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன், ஸ்வீடன் நாட்டு குழுவினர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.ஸ்வீடன் நாட்டில் நகராட்சிகளில் பணியாற்றும் பணியாளர்களை உறுப்பினராக கொண்டு ‘கம்யூனல்‘ என்ற தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து, கம்யூனல் உதவி இன்டர்நேஷனல் செயலாளர் கிறிஸ்டினா ஓல்சன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை ஆய்வு செய்தனர்.மாலையில், தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு நகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஸ்வீடன் நாட்டு குழுவினருக்கு நெல்லை ஜங்ஷனில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்வீடன் நாட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், தமிழக மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலர் சங்கங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி, மாநகராட்சி கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் சீத்தாராமன் தலைமை வகித்தார். மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் சண்முகம் வரவேற்றார்.தொடர்ந்து ஸ்வீடன் நாட்டு தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து கிறிஸ்டீனா ஓல்சன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் வெங்கட்ராமன், தூத்துக்குடி மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் சுடலைமுத்து, நெல்லை மாவட்ட நகராட்சி கூட்டமைப்பின் தலைவர் நாகூர் மீரான், நெல்லை கூட்டமைப்பின் செயலாளர் விவேகானந்தன், மாநில அமைப்பு செயலாளர் முத்துதுரை, நகர சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.முருகானந்தம் நன்றி கூறினார்