தினமலர் 24.04.2010
தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
சென்னை : ‘மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில், குழந்தைப் பேறுக்கு அனுமதிக்கப்படும் பெண்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும்‘ என்று மேயர் சுப்ரமணியன் கூறினார். சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்து, தமிழ்ப் பெயர் சூட்டப்பட்ட குழந் தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி தி.நகர் சர்.பிட்டி. தியாகராயர் கலை அரங்கில் நேற்று நடந்தது. மேயர் சுப்ரமணியன் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி கூறியதாவது: மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகள் சிறந்த வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளன. குளிர் சாதன வசதி மற்றும் பிரசவத்திற்கு ஒரு முறை மட்டுமே உபயோகப் படுத்தும் உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ரூபாய் 18 லட்சம் செலவில் ஒரு முறை மட்டுமே உபயோகப்படுத்தும், ஏழாயிரம் உபகரணங்கள் வாங்கப்பட்டது.
இந்த ஆண்டு 23 லட்ச ரூபாய் செலவில், ஒரு முறை உபயோகப் படுத்தும் 15 ஆயிரம் உபகரணங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பைகள் வழங்கப்படுகிறது. அதில் குழந்தைக்கு சட்டை, டவல், சோப்பு, பவுடர் என, 160 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கும். இதுவரை ரூபாய் 39 லட்சத்து 50 ஆயிரம் செலவில் 28 ஆயிரத்து 900 குழந்தைகளுக்கு பரிசுப் பைகள் வழங்கப் பட்டுள்ளது.கடந்த ஆண்டு முதல்வர் பிறந்தநாளிலிருந்து, மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைகளில் பிறந்து தூய தமிழில் பெயர் சூட்டப் பட்ட குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஜூன் மாதம் மூன்றாம் தேதி இதுவரை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளில், 2,250 குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டப்பட்டது. இதில் இதுவரை 750 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப் பட்டுள்ளது. மீதமுள்ள குழந்தைகளுக்கு வழங்க ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் பெண்களுக்கு அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் வரை மூன்று வேளை உணவும், இலவசமாக வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதோடு குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் மெத்தையுடன் கூடிய கொசுவலை வழங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.நிகழ்ச்சியில் ஆளுங் கட்சி தலைவர் ராமலிங்கம், கோடம்பாக்கம் மண்டல வார்டு குழு தலைவர் ஏழுமலை , மாவட்ட குடும்ப நல அதிகாரிகள் சாருமதி, பானுமதி ஆகியோர் பங்கேற்றனர்.