தினமணி 22.04.2010
தமிழ் கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா
பெங்களூர், ஏப்.21: மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் கவுன்சிலர்களுக்கு பெங்களூர்த் தமிழ்ச்சங்கம் சார்பில் வரும் 25-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
அண்மையில் நடந்துமுடிந்த பெங்களூர் மாநகராட்சி மன்றத் தேர்தலில் அதிக அளவில் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழ்ச் சங்கம் ஏற்கெனவே பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிததுள்ளது.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து தமிழர்களின் உரிமைக்காகப் போராட முன் வருகிற மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு சிறந்த முறையில் பாராட்டு விழா நடத்திட தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்து வருகிறது.
ஏப்ரல் 25-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த பாராட்டு விழா தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். விழாவில் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரும், உலகப் பெரும் தமிழர் விருது பெற்றவருமான க.சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார். தமிழ்ச் சங்க தணிக்கையாளர் என்.சி.எஸ்.ராகவன், தொழில் அதிபர் எம்.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் பங்கு கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கவுன்சிலர்களை பாராட்டிப் பேசுவார்கள். வெற்றிபெற்ற தமிழ் கவுன்சிலர்களுக்கு பாராட்டு இதழும், நினைவுப் பரிசும் வழங்கப்படும்.
தமிழர்களின் வெற்றிக்காக தமிழ்ச் சங்கம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வாணவேடிக்கை நடத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.