தினமலர் 07.04.2010
தரமற்ற குடிநீர் பாக்கெட் விற்பனை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தண்ணீர் தேவை அதிகரித்து இருப்பதால், தரமற்ற குடிநீர் பாக்கெட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேல் தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் உக்கிரம் வாட்டி வருகிறது. மாவட்டத்தின் உள்ள நீர ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைவு காரணமாக விவசாய கிணறுகள், கிராம பகுதி குடிநீர் திட்டத்துக்கான போர்வெல் அனைத்திலும் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலை ஏற்பட்டுள்ளது.வெயில் உக்கிரம் காரணமாக குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடி வருகிறது. தண்ணீர் தேவையால் பாக்கெட், பாட்டில், கேன்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் குடிநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.குடிநீர் விற்பனைக்கு ஐ.எஸ்.ஐ., தரம் உள்ளிட்ட பல்வேறு தர சான்று பெற்று, உரிய உரிமம் பெற்று விற்பனை செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் விற்பனையை அதிகரிப்பு காரணமாக தரமற்ற குடிநீர் விற்பனை மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.
தரமற்ற பிளாஸ்டிக் பாக்கெட்டிகளில் சுத்திகரிப்பு இல்லாத குடிநீர் அடைக்கப்பட்டும், அதே போல் கேன்களில் தண்ணீர் அடைக்கப்பட்டும் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தரமற்ற குடிநீர் பாக்கெட்களை வாங்கி பருகும் போது, பிளாஸ்டிக் வாடை அடிக்கிறது. அதே போல் கேன்களிலும் அடைக்கப்படும் தண்ணீரும் ஒரு வித மணம் வருவதால், தண்ணீர் குடிக்க முடியாமல் மக்கள் அவதிப்படும் நிபைலயுள்ளது. விற்பனையை அதிகம் இருப்பதை பயன்படுத்தி தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் தரமற்ற குடிநீர் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களும் தரமற்ற முறையில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களில் பஸ் ஸ்டாண்டில் இது போன்ற விற்பனை நடந்து வருகிறது. ‘சுகாதார துறையினர் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தி தரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.