தினகரன் 04.06.2010
தரமற்ற பணிகளுக்கு அபராதம் மாநகராட்சி அதிரடி
கோவை, ஜூன் 4:கோவை மாநகரில் தரமில்லாத நடைபாதை, பூங்கா, ரோடு பணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு மாநகரில் ரோடு, நடைபாதை, பூங்கா, மின் விளக்கு, பஸ் ஸ்டாப் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணிகளை பொறியாளர்கள், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் அடிக்கடி பார்வையிட்டு வருகின்றனர். ரேஸ்கோர்சில் 2.5 கோடி ரூபாய் செலவில் நடைபயிற்சி தளம், பூங்கா, மின் விளக்கு சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகளை ஆய்வு செய்த கமிஷனர் அன்சுல்மிஸ்ரா 10ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
பூங்காவில் அழகான மலர் செடிகளை நடவேண்டும். புல்வெளி, பூங்கா, மின் விளக்குகளை முறையாக பராமரிக்குமாறு தெரிவித்தார். இதேபோல், மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் பணிகளை ஆய்வு செய்த அவர் ஒரு வாரத்தில் பஸ் ஸ்டாண்ட் பணிகளை முடிக்கவேண்டும். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடப்பதாக தெரிவித்தார்.
சிங்காநல்லூர், ராமநாதபுரம் பகுதியில் செம்மொழி மாநாட்டிற்காக ரோடு, நடைபாதை, பூங்கா பணிகள் நடக்கிறது. இந்த பணியில் தரமில்லை என அதிருப்தி தெரிவித்தார். ரோட்டை தோண்டி பார்த்த போது, தார் கலவை சரியான விகிதத்தில் கலக்கவில்லை, மேலும் சில இடங்களில் ரோடு முழுமை பெறாமல், கணக்கு காட்டப்பட்டதாக தெரிகிறது.
அதிருப்தியடைந்த கமிஷனர், ரோடு பணி செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். ரோடு நல்ல முறையில் அமைத்தால் தான் பில் தொகை வழங்கப்படும் என எச்சரித்தார். கிழக்கு மண்டல பகுதியில் நடைபாதை, பூங்கா பணிகளை சரியாக செய்யாத 5 ஒப்பந்த நிறுவனங்களுக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டது.