தரமற்ற பிளாஸ்டிக் பைகளை விற்றால் கடும் நடவடிக்கை
நாரவாரிகுப்பம் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.
பேரூராட்சித் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 13-வது வார்டில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்புதல் வழங்குவது. அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு வராத வகையில் உரிய நடவடிக்கை எடுப்பது.
திருமண மண்டபம், உணவு விடுதி, கோழி இறைச்சிக்கடை, திரைப்பட அரங்கம், தள்ளு வண்டி உணவகம் போன்றவற்றில் இருக்கும் குப்பை, கழிவுகளை பேரூராட்சி நிர்வாக கட்டணம் விதித்து பேரூராட்சி வாகனம் மூலம் அகற்ற ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்வது.
பிளாஸ்டிக் கழிவு இல்லாத பேரூராட்சியாக அமைத்திட ஏதுவாக, 40 மைக்ரானுக்குக் குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.