தினமலர் 18.11.2011
தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் பணியிடங்கள் காலி : நிர்வாக பணிகளில் தொய்வு
தமிழகம் முழுவதும், தரம் உயர்த்தப்பட்ட, 36 நகராட்சிகளில், காலியாக உள்ள பணியிடங்கள், இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால், பெரும்பாலான நகராட்சிகளில் சுகாதாரம், கட்டட அனுமதி மற்றும் நிர்வாக பணிகளில், கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2010, ஆகஸ்டில், தி.மு.க., அரசால், 36 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டன. ஓராண்டுக்கு மேலாகியும், மக்கள் தொகை அதிகமுள்ள முக்கியமான பல நகராட்சிகளில் கமிஷனர், பொறியாளர், மேலாளர், சுகாதார அதிகாரிகள், நகரமைப்பு அதிகாரிகள், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள், காலியாக உள்ளன. இவற்றை, அருகிலுள்ள நகராட்சிகளில் பணிபுரிபவர்கள், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.
பணி தொய்வு : சென்னையை அடுத்த பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய மூன்று நகராட்சிகளிலும், கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. இம்மூன்று நகராட்சிகளிலும், நகராட்சி பொறியாளர், கமிஷனராக பொறுப்பு வகிக்கிறார். இதனால், நிர்வாக பணிகளை மேற்கொள்வதில், பெரும் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
சமீபகாலமாக, நகராட்சி பகுதிகளிலுள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து கணக்கெடுத்து, நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை செய்ய, சென்னையை ஒட்டியுள்ள பெரும்பாலான நகராட்சிகளில், நகரமைப்பு அலுவலர்கள் இல்லை.
ஒரு உள்ளாட்சி அமைப்பிலுள்ள நகரமைப்பு அலுவலரே, மற்ற உள்ளாட்சிக்கு கூடுதல் பொறுப்பாளராகும் போது, நிர்வாக பணிகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பணியிடங்கள் நிரப்புவது மட்டுமே பிரச்னையைத் தீர்க்கும்.
விரைவில் நியமனம் : நகராட்சி நிர்வாக துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “”தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு நியமிக்கப்பட வேண்டிய பணியிடங்கள் குறித்து, பட்டியல் தயாரித்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஒதுக்க வேண்டிய நிதி குறித்து அறிக்கை அனுப்பியதில், நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது; விரைவில் பணியாளர்கள் நியமனமும் இருக்கும்,” என்றார்.