தினமணி 22.06.2010
தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடக்க விழா
திருவள்ளூர், ஜூன் 21: தரம் உயர்த்தப்பட்ட திருவள்ளூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் எம்எல்ஏ இ.ஏ.பி.சிவாஜி, பள்ளியை தரம் உயர்த்த ரூ. 2 லட்சம் வரை நன்கொடை அளித்தவர்களின் பெயர்ப் பட்டியல் கல்வெட்டை திறந்து வைத்தார்.
அவர் பேசியது: திருவள்ளூர் நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது. இதுவரை மேல்நிலைக் கல்விக்காக இங்குள்ள அரசு நிதிநாடும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் வாசலில் காத்திருக்கும் நிலை இருந்தது. அல்லது செவ்வாப்பேட்டை, பாண்டூர், மணவாளநகர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது நகரிலேயே திறக்கப்பட்டதால் பெற்றோர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் திருவள்ளூருக்கு அரசு கலைக் கல்லூரி கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற 4 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் முத்துராமேஸ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், திமுக நகரச் செயலர் கா.மு.தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரகுபதி வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவி, மாவட்டக் கல்வி அலுவலர் (திருவள்ளூர்) கல்யாணசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உதவித் தலைமை ஆசிரியர் செல்வகுமார், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.