தினகரன் 08.10.2010
தர்மபுரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல் குவியும் குப்பைக்கு நிரந்தர தீர்வு
தர்மபுரி, அக்.8: தர்மபுரி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம்பிரிக்கப் படவுள்ளது. பென்னாகரம் சாலையில் உள்ள குப்பை குவியல் படிப்படியாக அகற்றப்படவுள்ளது.
தர்மபுரி நகரில் தினமும் 30 டன் வரை குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை நகராட்சி வாகனங்கள் மூலம் பென்னாகரம் சாலையில் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைமேடு அருகே சத்யாநகர், இசைவேளாளர் நகர், சவுளுப்பட்டி, ஏ.ரெட்டிஅள்ளி, அரசு போக்குவரத்து கழக குடியிருப்பு ஆகியவை உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மர்ம நபர்கள் சிலர், மாலை நேரங்களில் குப்பையை தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மழைக்காலங்களில் குப்பைகளிலிருந்து பெருகிவரும் கழிவுநீர், நிலத்தடி நீரில் மாசு ஏற்படுகிறது. இப்பகுதிகளில் துர்நாற்றத்துடன் கூடிய கழிவுநீர் தான், ஆழ்துளை கிணற்றில் இருந்து வருகிறது. இதனால் மக்கள் நீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகரமன்ற தலைவர் ஆனந்தகுமார்ராஜா கூறும்போது, “குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். தடங்கம் ஊராட்சி பகுதியில் குப்பைகளை ஒட்டுமொத்தமாக கொட்டி வைத்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு தற்போது சுற்றுசுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2 பெரிய ராட்சத தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்தவுடன், பென்னாகரம் ரோட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்படும். குப்பை மேடால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், கண்காணிக்கவும் சூப்பர்வைசர் தலைமையில் 2 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.