தலித் மாணவ–மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுதல் முகாம் மேயர் தொடங்கி வைத்தார்
தலித் மாணவ–மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் இன்று கோவையில் நடைபெற்றது. மேயர் செ.ம.வேலுசாமி முகாமை தொடங்கி வைத்தார்.
கல்வி வழிகாட்டுதல் முகாம்
பிளஸ்–2 தேர்வில், வெற்றி பெற்ற தலித் மாணவ–மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு முகாம், கோவை தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடைபெற்றது. தேசிய இளைஞர் விருதாளர் எஸ்.செல்வகுமார் தலைமை தாங்கினார். விழாவில் அரசு ஆணைகள் தொகுப்பை மேயர் செ.ம.வேலுசாமி வெளியிட்டார். பேராசிரியர் அரங்க மல்லிகா நூலை பெற்றுக்கொண்டார். விழாவில் மேயர் செ.ம.வேலுசாமி பேசும்போது கூறியதாவது:–
அரசு கல்வி திட்டங்கள்
தலித் மாணவ–மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இலவச கல்வி திட்டங்களால் நன்மை செய்து வருகிறார். மாணவ–மாணவிகள் பள்ளிக்கு வந்தால் மட்டும்போதும், புத்தகம் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழக அரசு வழங்கும் இலவச லேப்–டாப் கிராமப்புற மாணவ–மாணவிகள் உள்பட பலருக்கும் மிக உபயோகமாக இருந்து வருகிறது. தலித் மாணவ–மாணவிகள் கல்வியில் அக்கறை செலுத்தி அரசின் உயர் பதவிகளுக்கு வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு செ.ம.வேலுசாமி கூறினார்.
உயர் கல்வி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தல் மற்றும் பயன்பாடுகள் குறித்து வேலைவாய்ப்பு உதவி இய்குனர் ஆர்.ஜோதி மணி விளக்கி கூறினார். தலித் மாணவர்களின் வங்கி கடன் பெறுவது, மருத்துவ கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குவிந்துள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வி குறித்து துறை வல்லுனர்கள் விளக்கி கூறினார்கள்.
இந்த முகாமில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராஜு, எஸ்.எம்.சுரேஷ், கோவை ரவிக்குமார், ஓய்வுபெற்ற தாசில்தார் கே.சந்திரன், வெரோனிகா, வக்கீல் வெண்மணி, சி.எம்.மோத்திராஜ், பழனியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா முடிவில் ரவிக்குமார் நன்றி கூறினார்.