தினமணி
தலையங்கம்
: மாநகரங்கள் ஆவது எப்போது?சென்னை மாநகர மேயர் மா
. சுப்பிரமணியனைப் பொறுத்தவரை, சென்னையைச் சிங்காரச் சென்னையாக அவரால் மாற்ற முடியவில்லை என்பது உண்மை. அவர் மட்டுமல்ல, அவருக்கு முன்னால் இருந்தவர்களால் மட்டும் மாற்ற முடிந்துவிட்டதா என்றால் கிடையாது. ஆனால், மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும், தவறுகளைத் திருத்த வேண்டும் என்கிற முனைப்பு மேயர் மா. சுப்பிரமணியனுக்கு நிச்சயமாக இருக்கிறது. இதை நாம் பாராட்டியே தீரவேண்டும்.மழைக்காலம் வந்துவிட்டால்
, சென்னை மாநகரம் ஒரு மா நரகமாக மாறிவிடுவது என்பது கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் அவஸ்தை. இத்தனைக்கும் சென்னை ஒரு கடலோர நகரம். போதாக்குறைக்கு சென்னையின் குறுக்கே இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் ஓடி, கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளும், கால்வாய்களும் முறையாகப் பராமரிக்கப்பட்டால், எவ்வளவு அடைமழை பெய்தாலும், சாலைகளில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தேங்காமல் சென்னையைப் பாதுகாக்க முடியும். அப்படி இருந்தும், சென்னை வெள்ளத்தில் மிதப்பது என்பது நாம் ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் அவலம்.இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி சற்று முன்பே விழித்துக் கொண்டிருக்கிறது
. மேயர் மா. சுப்பிரமணியன், மாநகர மக்களின் வாழ்வுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளின் அதிகாரிகளை ஒன்றுகூட்டி, ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார். சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், குடிசைமாற்று வாரியம், வானியல்துறை என்று எல்லா துறையினரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என்கிற மேயரின் சிந்தனையே ஒரு புதிய முயற்சி. கடந்த ஆண்டும் இதேபோல ஒரு முயற்சியை மேற்கொண்டு ஓரளவு பிரச்னை இல்லாமல் மழைக்காலச் சோதனைகளை எதிர்கொண்ட சாதனை, மேயர் சுப்பிரமணியனுடையது.அடைமழை தொடங்கும் அக்டோபர் மாதத்துக்குள்
, ஆங்காங்கே குடிநீர் வாரியத்தால் தோண்டப்பட்டுக் கிடக்கும் சாலைகளைச் செப்பனிடுவது, வானியல் துறையின் உதவியுடன் மழை இல்லாத நாள்களை முன்கூட்டியே கணக்கிட்டு சாலை செப்பனிடுதல் பணிகளை முடுக்கிவிடுவது, சென்னையிலுள்ள ஏறத்தாழ 200 குடிசைப் பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவியுடன் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவது, சென்னையிலுள்ள அத்தனை கால்வாய்கள் மற்றும் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணிகளை உடனடியாக முடுக்கிவிட்டு தயார் நிலையில் இருப்பது என்று பெருமழையை எதிர்நோக்கும் பணிகளில் முன்னெச்சரிக்கையுடன் சென்னை மாநகராட்சி முனைப்புடன் இறங்கி இருப்பதை வரவேற்பதுடன் நின்றுவிடாமல், மேயருக்கும் அவரது குழுவினருக்கும் உற்சாகமும் ஒத்துழைப்பும் தரவேண்டிய பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கு இருக்கிறது.இதனால் எல்லாம் சரியாகி விடுமா
? சென்னை மாநகராட்சி என்னதான் முயன்றாலும் எதுவும் செய்துவிட முடியாது என்றெல்லாம் எதிர்மறைச் சிந்தனைகளை முன்வைப்பவர்களை நாம் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இது நமது நகரம் என்கிற உணர்வுடன் மக்கள் செயல்பட்டால் மட்டுமே, அரசும் மாநகராட்சியும் முன்வைக்கும் திட்டங்கள் வெற்றிபெற முடியும். மேலும், பெருமழையால் பாதிக்கப்படுவது நாம்தான் எனும்போது மாநகராட்சியின் முயற்சிகளைப் பற்றி நாம் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை
, சொல்லப்போனால் தமிழகத்திலுள்ள எல்லா நகரங்களையும் எடுத்துக் கொண்டால், காணப்படும் அத்தனை குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் காரணம், தொலைநோக்குப் பார்வையே இல்லாத நகர் மற்றும் ஊரமைப்புத் துறையும், பெருநகர் வளர்ச்சிக் குழுமங்களும்தான். குறுகிய கண்ணோட்டத்துடன் இவை செயல்படுகின்றன என்பது மட்டுமல்ல, மக்களின் நன்மை கருதி என்பதைவிட ரியல் எஸ்டேட் அதிபர்களின் வளர்ச்சியைக் கருதி மட்டுமே இவர்கள் செயல்படுவதும்தான் இத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம்.வீடு கட்ட வேண்டும் என்று மாநகராட்சியிடம் அல்லது பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி பெறும் ஒருவருக்கு
, எந்தவிதக் கையூட்டும் கொடுக்காமல் மின்சாரம், குடிநீர், வடிகால் போன்றவைகளுக்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று இனியும் ஏன் அரசால், நகர் மற்றும் ஊரமைப்புத் துறையால் உத்தரவாதம் அளிக்க முடியவில்லை? மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதைவிடத் தாங்கள் ஆதாயம்பெற வேண்டும், தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக மட்டுமே பலதுறைகள் செயல்படுகின்றன என்பதை வீடுகட்டுபவர்கள் புரிந்து கொள்வார்கள். காரணம், எல்லோருக்கும் பங்கு போய்ச் சேரவேண்டும் என்கிற சமதர்ம நோக்கம்தான்.மயிலாப்பூர்
, திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம் போன்ற சென்னையின் பழைய பகுதிகளில் சாலையை விரிவுபடுத்துவது என்பது இயலாத ஒன்று. பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருபவர்களைத் தங்கள் வீடுகளை இடிக்கச் சொல்லி சாலையை விரிவுபடுத்த முடியாதுதான். ஆனால், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான நங்கநல்லூர், முகப்பேர், பெரியார் நகர் போன்ற பகுதிகள் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் தோன்றியவைதானே! இங்கே ஏன் நடைபாதைகள் இல்லாத குறுகிய சாலைகள் ஏற்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்? பெரியார் நகர் சென்னை நகரின் புறநகர் பகுதியாக உருவான பகுதி. இங்கே கந்தசாமி தெரு என்கிற தெரு இருக்கிறது. இந்தத் தெருவில் ஒரு பஸ் போனால் வேறு எந்த வாகனமும் அந்தத் தெருவின் ஓரமாக நிறுத்தப்படக்கூட முடியாது.புறநகர்ப் பகுதிகளில் சாலையின் இருபுறமும் குறைந்தது இருபது அடிகள் நடைபாதைக்காகவும்
, வாகனங்களை நிறுத்தவும் இடைவெளி விட்டுத்தான் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என்று சென்னையில் மட்டுமல்ல எல்லா தமிழக நகரங்களிலும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்படாமல் இருக்கிறதே, ஏன்? இதற்குக் காரணம், அதைப் பற்றிய அக்கறையில்லாமைதான். அப்படியொரு தொலைநோக்குப் பார்வை ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போகலாம். ஆனால், அதிகார வர்க்கத்துக்கு ஏன் எடுத்துரைக்க மனமும், சிந்திக்கத் திறமும் இல்லாமல் போயிற்று?இப்போதும் ஒன்று குறைந்துவிடவில்லை
. நகரங்கள், நாளும் பொழுதும் மக்கள் பெருக்கத்தால் மூச்சு முட்டத் தொடங்கிவிட்டிருக்கின்றன. சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியனைப் போல பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், தங்களை முன்னிறுத்தாமல் மக்கள் நலனையும், வருங்கால வளர்ச்சியையும் மட்டும் கருத்தில் கொண்டு செயல்படத் தொடங்கினால் போதும். மாநரகங்கள் மாநகரங்களாகிவிடும்…