தினமணி 11.07.2012
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்றால், பணத் தட்டுப்பாடு வந்தால் பத்தாயிரம் யோசனைகள் பறந்து வரும்.
நகராட்சிகள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதியைக் கடன்பத்திரங்கள் மூலம் திரட்டிக்கொள்ளலாம் என்றும், இதற்கு எந்தெந்த நகராட்சிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத்.
நகராட்சிகள் கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதிதிரட்டுவது புதிதல்ல. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இத்தகைய நடைமுறை இருக்கின்றது. நகர்மேம்பாட்டுத் திட்டங்களுக்காக கடன்பத்திரங்கள் வெளியிட்டு, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்னர் உறுதியளித்தபடி வட்டியோடு பணத்தைக் கொடுத்துக் கடன் பத்திரத்தைத் திரும்பப் பெறுகிறார்கள். அங்கெல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள், மக்கள் வரிப்பணத்தில் செயல்படுகிறோம் என்கிற பொறுப்புணர்வுடன் பணியாற்றுவதால் மக்களும் நம்பிக்கையுடன் நகராட்சி அமைப்புகளின் பத்திரங்களில் மனமுவந்து முதலீடு செய்கிறார்கள்.
ஒரு நிறுவனத்தைத் தொடங்குதல் அல்லது விரிவாக்கத்துக்காக கடன் பத்திரங்கள் வாங்குவதைக் காட்டிலும், நகராட்சி வெளியிடும் கடன்பத்திரங்களை வாங்குவது மிகவும் பாதுகாப்பானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏனென்றால், நிறுவனங்கள் திடீர் நஷ்டத்தில் காணாமல் போய்விடும். ஆனால், ஒரு நகராட்சி மேலும் மேலும் விரிந்து வளருமே தவிர, குன்றிவிடாது. ஆகவே, நம்பிக்கையுடன் கடன்பத்திரங்களை வாங்கலாம்தான்.
நகராட்சிகளின் கடன்பத்திரங்களுக்கான வட்டி குறைவாக இருந்தாலும்கூட, நம்முடைய ஊர், நமக்கான திட்டம் என்கின்ற உணர்வுடன், லாபநோக்கம் இல்லாமல் கடன் பத்திரங்களை வாங்கி, வேண்டிய நிதியை உருவாக்கிக் கொடுத்து, திட்டத்தை நிறைவேற்றிப் பயன்பெறும் நல்லுணர்வுள்ளோர் உலகம் முழுதும் இருக்கிறார்கள். அதில் இந்திய நகரங்களும் விதிவிலக்கல்ல.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே மணிமுத்தாறு அணைத் திட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கான அணையைக் கட்டக் கோரிக்கை வைத்த நேரத்தில், அப்போது சென்னை ராஜதானியின் முதல்வர் பொறுப்பில் இருந்த ராஜாஜி, விவசாயிகளிடம் அதற்கான நிதியைத் திரட்டிக் கொடுப்பீர்களா என்று கேட்டார். விவசாயிகளும் கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 80 லட்சம் நிதியைத் திரட்டிக் கொடுத்தார்கள். ஐந்து ஆண்டுகளில் இந்தக் கடன் பத்திரத் தொகை வட்டியுடன் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் கடன்பத்திரங்கள் வெளியிட்டு நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் என்பவை – கூட்டுக் குடிநீர்த் திட்டம், புதை சாக்கடைத் திட்டம் ஆகியவைதான். பெரும்பாலான நகராட்சிகள் இந்த இரண்டையும் உலக வங்கிக் கடன் பெற்று நிறைவேற்றி வருகின்றன. ஆனால், இந்தக் கடன் தொகைக்கான வட்டியைக்கூடச் செலுத்த முடியாத சிக்கலில் உள்ளன. காரணம், குடிநீர் கட்டணம், மற்றும் புதைசாக்கடை திட்டத்துக்கான கட்டணங்களை உலக வங்கி நிர்ணயிக்கும் அளவுக்கு வாங்க முடிவதில்லை. கட்டணத்தை உயர்த்தினால் மக்களும் எதிர்க்கட்சியினரும் கூக்குரல் எழுப்புகின்றனர்.
வெளிநாடுகளில் குடிநீர் விநியோகக் கட்டணம் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படுகிறது. கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற போராட்டங்கள் கிடையாது.
இந்தியாவில் இத்தகைய கடன்பத்திரங்கள் மூலம் நிதிபெற்று, மொத்தப் பணத்தையும் மீட்டெடுக்க முடியும் என்பது பாலம் கட்டும் திட்டத்திற்கு மட்டுமே சாத்தியமாக இருக்கும். இதில் ஊழல் இருந்தாலும், மக்களிடம் சுங்கம் வசூலித்து ஈடுகட்டி விடலாம். ஆனால், குடிநீர் விநியோகம், புதைசாக்கடை திட்டம் ஆகியவற்றுக்குக் கடன்பத்திரம் வெளியிட்டால், நகராட்சி அமைப்புகள் பணத்தைத் திருப்பித் தருவதற்கான எந்தவித சாத்தியங்களும் தென்படவில்லை.
பெரும் திட்டங்களைத் தீட்டி, கடன்பத்திரங்கள் மூலம் பணம் திரட்டுவதென்றால், இனிப்பு சாப்பிடுவதைப் போல! கட்சி பேதமின்றிக் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரே கூட்டணியாக வந்து நிற்பார்கள். அதிகாரிகளும் முனைப்புடன் பத்திரங்களை விற்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், எப்படி இதைத் திருப்பிக் கொடுப்பார்கள்?
இப்போதைய நடைமுறையில் ஒரு நகராட்சியின் வருவாய் என்பது குடிநீர் கட்டணம், வீடு மனை, சொத்துவரி, தொழில்வரி, கடை வாடகை, தொழில் உரிமம் மற்றும் பிறப்பு இறப்புச் சான்றிதழ் கட்டணங்கள் இவைதான். இதைக் கொண்டுதான், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுத்த மிச்சத்தில், தெருவிளக்குகளுக்கான மின்கட்டணம் கட்டுவதும் ஒவ்வொரு வார்டிலும் மீண்டும் மீண்டும் சாலைகள் போடுவதும் நடக்கிறது. மற்ற செலவுகள் அனைத்துக்கும் மாநில அரசிடம் கையேந்தி நிற்க வேண்டியிருக்கிறது.
பெருநிறுவனங்களும், தொழிற்பேட்டைகளும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் பெரும்பாலும் ஊரகப் பகுதியில்தான் அமைகின்றன. இவை நகராட்சி எல்லைக்குள் இருந்து தொழில்வரி கிடைத்தாலும், அந்த நிறுவனங்களின் உற்பத்தி வரி நேரடியாக மாநில, மத்திய அரசைச் சேர்கிறது. வருவாய்த் துறையும் மாநில அரசிற்கு நேரடியாகப் பணியாற்றி வருமானத்தைக் கொண்டு சேர்க்கிறது. அதில் நகராட்சிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. நகரின் சொற்ப வருமானத்தைக் கொண்டு செயல்படும் நகராட்சிகளை நம்பி எப்படி கடன் பத்திரம் வாங்குவார்கள்? அல்லது இத்தகைய கடன்பத்திரம் அளிக்க “செபி’ போன்ற அமைப்புகள் எப்படி சம்மதிக்கும்? இப்படியெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகின்றன. கடன் பத்திரத்தை வட்டியுடன் திருப்பித் தருகின்றன. ஆனால், இந்தியாவில் நகராட்சிகள் சேவை மட்டுமே அளிக்கின்றன. முறையாக வீட்டுவரியைக்கூட வசூலிக்காமல் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுகின்றன.
ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் நகராட்சிகளைக் கடன் பத்திரங்களை வெளியிட அனுமதிப்பது ஆபத்தை விலைக்கு வாங்கும் செயல். விபரீத யோசனைகளை முன்வைத்து மக்களிடம் இருக்கும் அற்ப சொற்ப சேமிப்பையும் அபகரித்து ஏப்பம் விடுவதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் துணைபோக வேண்டாம் என்பதுதான் நமது வேண்டுகோள்.