தினமணி 12.02.2010
தலைவாசல், வீரகனூர் ஓட்டல்களில் சுகாதாரத் துறை ஆய்வு
தம்மம்பட்டி, பிப்.11: சேலம் மாவட்டம் தலைவாசல், வீரகனூர், சிறுவாச்சூர் பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், டீக்கடைகளில் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது குடிநீர் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறதா, உணவு தயாரிக்கும் இடம் சுத்தமாக உள்ளதா, சாக்கடை நீர் முறையாக வெளியேறுகிறதா, பாத்திரங்கள் சுடுநீரில் கழுவப்படுகிறதா, உணவு பரிமாறுபவர்கள் எப்போதும் சுத்தமாக இருக்கிறார்களா, ஓட்டல் உரிமம் கட்டாயம் இருக்கிறதா, ஓட்டல், டீக்கடைகளில் உபயோகப்படுத்தும் மளிகை சாமான்கள் கலப்படம் இல்லாமல் இருக்கிறதா அப்பொருட்களின் தயாரிப்பு பொருள் பெயர், அதன் தயாரிப்பு நாள் போன்ற விவரங்கள், எச்சில் இலைகள் முறையாக அப்புறப்படுத்தப்படுகிறதா, பலகாரங்கள் கண்ணாடி போட்டு மூடி விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். இதுபோன்று இல்லாத ஓட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.