தினமலர் 26.04.2010
தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஓசூர் நகராட்சி தலைவர் எச்சரிக்கை
ஓசூர்: ”தவறு செய்யும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும், ” என நகராட்சி தலைவர் சத்யா எச்சரிக்கை செய்துள்ளார். ஓசூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. கமிஷனர் பன்னீர் செல்வம், துணை தலைவர் மாதேஸ்வரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: ஜெய்ஆனந்த் (தி.மு.க., ): ராஜகால்வாய் கால்வாயில் உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலங்களில் மழை நீர் ஏரியில் இருந்து வெளியேற கால்வாய் இல்லாததால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. நகராட்சி தலைவர் சத்யா: ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். பிரகாஷ் (காங்.,): அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி திட்டப்பணிகள் பணம் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நடக்கும் ஒரு சில பணிகளை அதிகாரிகள் மேற்பார்வையிடுவதற்கு வருவதில்லை. பணிகளில் பல்வேறு முறைகேடு நடக்கிறது.
சத்யா: பஸ்ஸ்டாண்ட் பணிக்கு நகராட்சி பொது நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் எடுக்கப்பட்டது. இதனால், வார்டுகளில் நடக்கும் மற்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்ததும், முன்போல் வளர்ச்சி திட்ட பணிகள் தொய்வில்லாமல் நடக்கும். அதுவரை குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய பணிகள் மட்டும் நிறைவேற்றப்படும்.
நகராட்சி துணை தலைவர் மாதேஸ்வரன்: சாந்தி நகர் பிள்ளையார் கோவில் எதிரே உள்ள வணிக வளாகத்துக்கு பில்டிங் ‘அப்ரூவல்‘ வழங்குவதற்கு, அதன் உரிமையாளரிடம் ஒரு பெண், ‘நகராட்சி தலைவர், துணை தலைவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்‘ என கூறி மூன்று லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.இதை போல் எத்தனை கட்டிட உரிமையாளர்களிடம் நகராட்சி பெயரை பயன்படுத்தி புரோக்கர்கள் லஞ்சம் பெற்று உள்ளார்களோ? தெரியவில்லை.நகராட்சி நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வரும் சம்பந்தப்பட்ட பெண் புரோக்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளை தடுக்க பில்டிங் ‘அப்ரூவல்‘ கமிட்டிக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும்.
சத்யா: லஞ்சம் கொடுத்ததாக கூறும் வணிக வளாக உரிமையாளரை எழுத்து பூர்வமாக புகார் கொடுக்க சொல்லுங்கள்.தவறு செய்யும் அதிகாரிகள், புரோக்கர்கள் மீது நகராட்சி மூலம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஆதாரம் இல்லாமல் வெறும் புகாரை மட்டும் கூற கூடாது.
விஜயகுமார் (தி.மு.க.,): ராம்நகர் மாரியம்மன் கோவில் திருவிழா 4ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைவசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சீனிவாசன் (சுயேச்சை): கடந்தாண்டு நகராட்சி வரவு, செலவு கணக்கு இதுவரை தாக்கல் செய்யவில்லை. ஏன் தாமதமாகிறது.
சத்யா: வரும் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.