தினமணி 04.09.2010
தாந்தோன்றிமலை: தெருக்களில் பெயர்ப் பலகை
கரூர், செப். 3: தாந்தோன்றிமலை நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சிக் கூட்ட மன்றத்தில் நடைபெற்ற இந்த சாதாரணக் கூட்டத்துக்கு, நகர்மன்றத் தலைவர் ஜெ. ரேவதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வசந்தாமணி, ஆணையர் எஸ். தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், 2010-11 ஆம் ஆண்டு திட்ட நிதி மற்றும் பொது நிதி வேலைகளை மேற்கொள்ள 28.07.10 அன்று விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டது தொடர்பாக உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. இதில், மீண்டும் ஒப்பந்தப்புள்ளி விட வேண்டும், விடக் கூடாது என்று உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், நகராட்சியில் 1 முதல் 13 வார்டுகள் வரை தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மேலும், நகராட்சிப் பகுதிகளிலுள்ள அனைத்துத் தெருக்களுக்கும், பெயர்ப்பலகை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், கவுன்சிலர்கள் பெ. ரவி, பி.எம். ரவி, கண்ணகி இளங்குமரன், கோடங்கிபட்டி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.