தினமணி 20.11.2009
தாமதமாகி வரும் திண்டுக்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகள்
திண்டுக்கல், நவ.19: திண்டுக்கல் நகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் தாமதமாகி வருகின்றன. ஓராண்டைக் கடந்த நிலையிலும் பணிகள் முடிவு பெறாததால் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.
திண்டுக்கல் சவேரியார்பாளையம், பூச்சிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் திருமண மண்டபங்களோ, அரங்கங்களோ இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்களது வீட்டு விழாக்களைக் கொண்டாடுவதற்காக இப்பகுதிகளில் சமுதாயக் கூடம் கட்டத் திட்டமிடப்பட்டது.
இதற்காக 2008-2009-ம் நிதி ஆண்டில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.7.8 லட்சம் வீதம் ரூ.15.6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அரங்கின் உள்பகுதிகளில் டைல்ஸ் கற்கள் பதிப்பதற்காகக் கூடுதலாக தலா ரூ.2 லட்சம் ஒதுக்கப்பட்டது. இத் திட்டத்துக்காக மொத்தம் ரூ.19.6 லட்சம் நிதி நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பூச்சி நாயக்கன்பட்டியில் அஸ்திவாரம் போடப்பட்டுள்ள நிலையிலும், சவேரியார்பாளையத்தில் முதல் தளம் வரை கட்டப்பட்டு பணிகள் பாதியிலேயே நின்று விட்டது.
இதுகுறித்து கே.பாலபாரதி எம்.எல்.ஏ. கூறுகையில், நிதி இல்லாமல் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டுப் போவது இயற்கையான விஷயம். ஆனால் நிதி முழு அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் பாதியிலேயே நின்றுள்ளன. இங்கு மட்டுமின்றி வார்டுகளில் சிமெண்ட் தளம், சுகாதார வளாகம், குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 2009-09-ம் நிதி ஆண்டிற்காக எம்.எல்.ஏ. தொகுதி நிதியிலிருந்து நகராட்சிக்கு ரூ.95.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் பணிகள் சரியாக நடைபெறாமல் உள்ளது.
பிள்ளையார்பாளையத்தில் அடிகுழாய் மற்றும் மினிபம்ப் திட்டம், 44-வது வார்டு பள்ளிவாசல் பகுதியில் பவர் பம்ப் மினி பவர் பம்ப், 18-வது வார்டு சேவியர் தெருவில் சிமெண்ட் சாலை, சிறுபாலம், இரண்டாவது வார்டில் கழிவு நீரோடை, சிமெண்ட் தளம், 38-வது வார்டு பள்ளிவாசல் தெருவில் சிமெண்ட் தளம், கழிவுநீரோடை, கிழக்கு ஆரோக்கியமாதா தெரு கழிவுநீரோடை, சிமெண்ட் தளம், 10-வது வார்டு துப்புரவு தொழிலாளர் காலனியில் சுகாதார வளாகம், சிமெண்ட் தளம், 22-வது வார்டு ஆர்.வி. நகர் பகுதியில் சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகளுக்கு முழு அளவில் நிதி ஒதுக்கியும் பணிகள் தடைபட்டுள்ளன.
அத்தியாசியப் பணிகளுக்கு நிதி இல்லை என்றாலும் கூட, வேறு நிதியைக் கொண்டு பணிகள் நடைபெற வேண்டும்.
ஆனால் திட்டத்திற்கு நிதி வழங்கி ஓராண்டாகியும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதற்கு நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப் போக்கு காரணம்.
இது குறித்து ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 நாளில் பணிகள் துவக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். ஆனால் ஒரு மாதம் ஆகியும் இதுவரை பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. பணிகளை உடனே துவக்க நகராட்சிக்கு ஆட்சியர் அறிவுறுத்த வேண்டும் என்றார்.