தினமலர் 05.10.2010
தாமிரபரணி – வாசு.,கூட்டுக் குடிநீர்திட்டப் பணி டிசம்பருக்குள் நிறைவுபெறும்: அதிகாரி தகவல்
ஆலங்குளம்:”வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தாமிரபரணி – வாசுதேவநல்லூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்படும்‘ என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி தெரிவித்தார்.கடந்த 2007ம் ஆண்டில் தாமிரபரணி – வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் 43 கோடி ரூபாய் செலவில் 79 கி.மீ. தூரம் பைப் லைன் அமைக்கப்பட்டு வருகிறது. ஆலங்குளத்தில் நடந்து வரும் இப்பணியை நெல்லை, கன்னியாகுமரி வட்ட குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், தென்காசி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் குத்தாலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:-தாமிரபரணி – வாசுதேவநல்லூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கும் வகையில் பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். இம்மாத இறுதிக்குள் ஆலங்குளம் நகருக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தில் முக்கூடல், காசிநாதபுரம், சேந்தமங்கலம், ராயகிரி ஆகிய இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.