தினமலர் 26.08.2010
தாம்பரம் வரை மெட்ரோ ரயில் : நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தாம்பரம் : வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏர்போர்ட் வரை அமையவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி கூட்டம், தலைவர் மணி தலைமையில் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வரை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்த தீர்மானத்தில், “சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வண்ணாரப்பேட்டையில் துவங்கி ஐகோர்ட், சென்னை சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், அண்ணா மேம்பாலம், சைதாப்பேட்டை, பரங்கிமலை வழியாக சென்னை விமான நிலையத்தை வந்தடையும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில், தாம்பரம் நகரம் சென்னையின் நுழைவாயிலாக உள்ளது. சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாம்பரம் வழியாக தினமும் ரயில், பஸ்கள் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இங்கிருந்து தினசரி 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தை, மூன்றாவது டெர்மினலாக மாற்ற திட்டமிடப்பட்டுள் ளது.
இந்நிலையில், தாம்பரம் மக்களின் வசதிக்காகவும், சுற்றுப்புற பகுதி மக்களின் வசதிக்காகவும் விமான நிலையம் வரை அமைக்கப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை, தாம்பரம் வரை நீட்டிப்பதற்கு, மாநில அரசின் மூலமாக, மத்திய அரசிடம் வலியுறுத்த தாம்பரம் எம்.எல்.ஏ.,வை கேட்டுக்கொள்வது‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.