தினமணி 24.09.2009
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிசு
நாகர்கோவில், செப். 23: கன்னியாகுமரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நகராட்சி, பேரூராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிசு வழங்கும் என ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் “பரவலாக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை‘ குறித்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 56 பேரூராட்சித் தலைவர்கள், செயல் அலுவலர்கள், நிர்மல் கிராம் புரஸ்கார் விருது பெற்ற 10 ஊராட்சித் தலைவர்கள், முழு சுகாதார இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற இந்த பயிற்சிப் பட்டறையை ஆட்சியர் தொடங்கிவைத்து பேசியதாவது:
உலக மயமாதல், நகரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், மக்களின் கலாசார மாற்றத்தாலும் திடக்கழிவுகள் உற்பத்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இத் திடக்கழிவுகளை முறையாக அகற்றி மேலாண்மை செய்யாவிட்டால் நிலத்தடி நீர் பாதிப்பு, சாக்கடைகள் தேக்கம், கொசு உற்பத்தி, குப்பைகளை எரிப்பதால் காற்று மாசு மற்றும் தினந்தோறும் தோன்றும் புதுப்புது நோய்கள் போன்றவற்றுக்கு காரணமாக இத் திடக்கழிவுகள் அமைந்துவிடும்.
பெருகிவரும் திடக்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதில் உள்ளாட்சி அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் மட்டும் தனித்து இத் திட்டத்தில் வெற்றி காண இயலாது. பொதுமக்களும் இதில் பங்கேற்பது அவசியம்.
மாவட்டம் முழுக்க சுற்றுப்புறங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டால் அது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிசு வழங்கும் என்றார் ஆட்சியர்.
எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அதிகாரி வி. கணபதி கருத்துரை வழங்கினார். மாவட்ட பேரூராட்சிகள் துணை இயக்குநர் டி. பாலச்சந்திரன் வரவேற்றார். குழித்தலை நகராட்சி ஆணையர் ஜி. தனலட்சுமி நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து பல்வேறு அமர்வுகளாக பயிற்சி பட்டறை நடைபெற்றது.