தினமலர் 16.02.2010
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு : பெங்களூரு கல்வி நிறுவனத்திற்கு அனுமதி
கோவை : மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூரிலுள்ள “சென்டர் பார் என்விரான்மென்ட்‘ கல்வி நிறுவனத்திற்கு, இரண்டாண்டுகளுக்கு விழிப்புணர்வு பணி மேற்கொள்ள வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு, நேற்று அனுமதி வழங்கியது. கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில், ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தும் பணிக்கு 96.51 கோடியில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கைக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.இத்திட்டம் குறித்து மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலுள்ள, பொதுமக்களிடையே திட்டக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிக்கு 45 லட்சரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இப்பணியை மேற்கொள்ள ஒப்பந்தபுள்ளி வரவழைக்கப்பட்டதில் பெங்களூருவை சேர்ந்த “சென்டர் பார் என்விரான்மென்ட்‘ கல்வி நிறுவனம், ஒப்பந்தப்புள்ளி திறனாய்வுக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டது.இந்நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் ஒப்பந்தப்புள்ளி தொகையை விலை குறைப்பு செய்ய மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது. அதன் படி 43 லட்சத்து 53 ஆயிரத்து 200 ரூபாயாக விலை குறைப்பு செய்துள்ளது.
இதனடிப்படையில் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களிடையே திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்த, பெங்களூரிலுள்ள “சென் டர் பார் என்விரான் மென்ட்‘ கல்வி நிறுவனம், இரண்டாண்டுகளுக்கு செயல்படுத்த வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு நேற்று அனுமதி வழங்கியது.
மாநகராட்சி மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு தேவையான அறிவியல் ஆய்வக உபகரணங்கள் மற்றும் இதர பொருட்கள் வாங்க 46 லட்ச ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. பிரதான சாலைகளை அழகுபடுத்துதல், நடைபாதை தளம் அமைப்பது போன்ற பணிகள் 50 லட்ச ரூபாயில் மேற்கொள்ள அனுமதி வழங் கப்பட்டது.கூட்டத்தில் நிதிக்குழு உறுப்பினர்கள் ஷோபனா, செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.