திண்டிவனத்தில் வலம் வரும் வரி வசூல் வாகனம்
திண்டிவனம் நகராட்சி சார்பில் நடமாடும் வரிவசூல் வாகனத்தை திண்டிவனம் நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். திண்டிவனம் நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடமாடும் வரிவசூல் வாகனத்தை மக்களின் பயன்பாட்டிற்கு தொடக்கி வைத்தார்.
நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும் இந்த வரிவசூல் வாகனம் செல்லும். நகர மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் வீட்டு வரி,குடிநீர் மற்றும் இதர வரிகளை செலுத்திக்கொள்ளலாம். இந்த வாகனம் ஒரு மாதம் காலத்திற்கு இயங்குமெனவும் மக்களின் ஆதரவை வைத்து இனி வரும் காலங்களில் தொடர்ந்து இயக்கப்படுமென நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், சுதாகர், ஸ்ரீராமலு பாலச்சந்திரன், முரளிதாஸ், என்.விஜயகுமார் உட்பட நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.