திண்டிவனம் நகராட்சியில் நடமாடும் வரி வசூல் மையம்
திண்டிவனம் நகராட்சி சார்பில் மக்களிடம் வரி வசூல் செய்ய புதிதாக நடமாடும் வசூல் மைய வாகனம் இயக்கப்பட உள்ளதாக நகர்மன்ற தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தெரிவித்தார்.
திண்டிவனம் நகராட்சிக் கூட்டம் அதன் தலைவர் கே.வி.என்.வெங்கடேசன் தலைமையில் நடந்தது. ஆணையர் அண்ணாதுரை, மேலாளர் கிருஷ்ணராஜ் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நகர்மன்றத் தலைவர் பேசுகையில், நகர மக்களின் நலன் கருதி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடமாடும் வசூல் மைய வாகனம் இயக்கப்பட உள்ளது. அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் நகராட்சிக்கான பல்வேறு வரிகளைச் செலுத்தலாம். தமிழக முதல்வர் அறிவித்தவாறு புதிய பஸ் நிலையப் பணிகள் இந்த ஆண்டே தொடங்கப்படும் என்றார்.
கூட்டத்தில், ஜெயபுரம் 21-வது வார்டில் புதிய கழிவு நீர் வடிகால் அமைக்க ரூ.2.55 லட்சம், சலவாதி சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்குக்கு சுற்றுச்சுவர் அமைக்க ரூ.8.75 லட்சம்,
நகராட்சி வணிக வளாகம் உள்ள செஞ்சி ரோடு பகுதியில் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க ரூ.8 லட்சம், 22-வது வார்டில் புதிதாக சிறுபாலம் அமைக்க ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்வது உள்பட மொத்தம் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.