தினமணி 28.07.2009
திண்டுக்கல்லுக்கு வைகை அணை மூலம் குடிநீர்
திண்டுக்கல், ஜூலை 27: திண்டுக்கல் நகரின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கே. பாலபாரதி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனி–எம்.வி.எம். கல்லூரி சாலை சந்திப்பில் ரூ. 4 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கை அவர் இயக்கி வைத்துப் பேசுகையில், காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தின் மூலம் நகருக்கு நீர் பெறப்பட்டாலும் 15 தினங்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் உள்ளது. இப் பிரச்னைக்கு தீர்வாக வைகை அணையில் இருந்து நேரடியாக திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்க திட்ட வரைவுகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
விழாவுக்கு தலைமை வகித்து திண்டுக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் பேசுகையில், நகர் முழுவதும் குடிநீர் விநியோகத்திற்காக ரூ. 1.25 கோடி செலவில் பகிர்மானக் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. பூச்சி நாயக்கன்பட்டி மற்றும் ஆர்.எம். காலனி அருகே 50 லட்சம் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இப்பணிகள் முடிவடைந்ததும் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க முடியும் என்றார்.
நகர்மன்ற துணைத் தலைவர் வ. கல்யாணசுந்தரம் வரவேற்றார். நகராட்சிப் பொறியாளர் ராமசாமி, உதவிப் பொறியாளர் வெற்றிச்செல்வி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.