தினமணி 06.08.2010
திண்டுக்கல் நகர் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு என்ன?
திண்டுக்கல், ஆக. 5: திண்டுக்கல் நகரில் நீண்ட காலமாக நீடித்து வரும் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். திண்டுக்கல் நகரில் தற்போது 20 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குடிநீரும் குழாய் இணைப்பு உள்ள அனைத்து வீடுகளிலும் முறையாக வருவதில்லை. பலர் மின்மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி விடுகின்றனர். மோட்டாரை நிறுத்திய பின்னர் தான் மற்ற குழாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது.
திண்டுக்கல் நகரம் பாறைகள் அதிகம் நிறைந்த பகுதி. இதனால் சில இடங்கள் மேடாகவும், சில இடங்கள் பள்ளமாகவும் உள்ளது. மேடான பகுதிக்கு தண்ணீர் வர மின்மோட்டாரைப் பயன்படுத்தும் நிலை உருவாகிறது. சிறப்பான முறையில் நீர் மேலாண்மை செய்வதன் மூலம் மின்மோட்டார் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும். திண்டுக்கல் அருகே உள்ள கோ.ராமநாதபுரம் ஊராட்சியின் நீர் மேலாண்மைத் திட்டமே இதற்கு சாட்சி. ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து விடும்போது மின்மோட்டாரையோ, அல்லது ஆழ்துளைக் குழாய்களையோ வைத்து தண்ணீர் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நகருக்கு ஆத்தூர் காமராஜ் சாகர் அணை மூலமே பெருமளவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 23 அடி கொள்ளவு உள்ள அணையில் சுமார் 7 அடிக்கும் மேல் சேறு நிரம்பி உள்ளது. இந்த சேற்றினை அகற்றும் தொழில் நுட்பம் தெரியாத காரணத்தினால் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரினை முழுமையாகச் சேமிக்க இயலவில்லை. பேரணையிலிருந்து மழைக் காலங்களில் மட்டுமே கிடைக்கும் நீரைக் கொண்டு விநியோகமும், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கிடைக்கும் நீரையும் கொண்டே நகரின் தேவையை 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது வைகை அணையிலிருந்து ரூ.100 கோடி செலவில் தனியாக குழாய் பதித்து திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை மாநில அரசு தயாரித்துள்ளது. ஏற்கெனவே பெரியாறு அணை பிரச்னையால் வைகையில் தண்ணீர் என்பது கேள்விக்குறியாகும் நிலையில் இத்திட்டம் முழுமையான பலன் தருமா என்பது தெரியவில்லை. நகரின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதால் சுமார் 400 முதல் 500 அடி ஆழம் வரை ஆழ்துளைக் குழாய் பதிக்கும் நிலை உள்ளது. பல வீடுகளிலும் நகராட்சி விநியோகம் செய்யும் குடிநீரையே அனைத்து உபயோகத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
நகராட்சியின் எல்லையில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் 7 குளங்கள் உள்ளன. இவை முறையாகப் பராமரிக்கப்படாததால் தூர்ந்து போய் வருகின்றன. ரூ.100 கோடியை இந்தத் திட்டத்துக்கு செலவழிப்பதற்குப் பதிலாக ஆத்தூர் காமராஜ்சாகர் அணையில் சேர்ந்துள்ள சேற்றை முழுமையாக அகற்றியும், தூர்ந்து வரும் நீராதாரங்களை மேம்படுத்தினால் நிலத்தடி நீர் அளவை அதிகரிக்க முடியும். இது மட்டுமே தண்ணீர் பிரச்னைக்கானத் தீர்வாக அமையும். திண்டுக்கல் நகராட்சி, மாவட்ட நிர்வாகம் மட்டும் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. மாநில அரசு நிதியை ஒதுக்கி பணிகளைத் துரிதப்படுத்தினால் மட்டுமே குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.