தினமணி 17.02.2014
திண்டுக்கல் மாநகராட்சி அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்: அமைச்சர்
திண்டுக்கல் மாநகராட்சியாகும் அறிவிப்பு ஓரிரு
நாளில் வெளியாகும் என பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மின்துறை
அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார்.
திண்டுக்கல் நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன்
பூங்காவில் ரூ.30 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. முதல்
கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவை
திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் வி.மருதராஜ் தலைமை வகித்தார். மாவட்ட
ஆட்சியர் ந.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற
மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பூங்காவை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது: வறட்சியின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில்
ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை சமாளிப்பதற்கு விரிவான ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் போதிய நீராதாரம் இல்லை என்பதால்,
குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்
வகையில் ரூ.70 கோடி மதிப்பிலான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
அதேபோல் மாநகாரட்சியாக நிலை உயர்த்தப்பட உள்ள திண்டுக்கல் நகரின் சாலைகளை
மேம்படுத்தவும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாநகராட்சியாக
தரம் உயர்த்தும் அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகும் என்றார்.
நகர்மன்றத்தலைவர் வி.மருதராஜ்: 3.55 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள
குமரன் பூங்கா 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும் நகர மக்களின் ஒரே
பொழுதுபோக்கு இடமாகவும் அமைந்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள
பராமரிப்பு பணிகளின் மூலம் மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை
உருவாகியுள்ளது. நடைபயிற்சி மேற்கொள்வோரின் வசதிக்காக நடைமேடை விரிவாக்கம்
செய்து கொடுக்கப்படும். மேலும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு ரயில்
வசதியும் ஏற்படுத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கே.ராஜன், நத்தம் தொகுதிச் செயலர்
ஆர்.வி.என்.கண்ணன், நகரச் செயலர் பாரதிமுருகன், நகர்மன்ற உறுப்பினர்கள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.