தினமலர் 19.01.2010
தினமும் ஒரு வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு: தினமலர் செய்தி எதிரொலி
மதுரை:மதுரையில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சில மாதங்களுக்கு முன் “வாரம் ஒரு வீதி‘ திட்டத்தை போலீசார்அறிமுகப்படுத்தினர். மாசிவீதிகள், ஆவணிவீதிகளில் மாநகராட்சிஉதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றியது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. என்ன காரணத்தினாலோ, இத்திட்டம் சில வாரங்களிலேயே முடங்கியது.
இதுகுறித்து, நேற்று முன் தினம், தினமலர் இதழ் மதுரை இணைப்பில் ஆக்கிரமிப்புகள் குறித்து, “கூட்டணி‘ என்ற தலைப்பில் செய்திவெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, வாரம் ஒருவீதி திட்டத்தை, “தினமும் ஒரு வீதி‘திட்டமாக செயல்படுத்த போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் முடிவு செய்துள்ளார்.அவர் கூறியதாவது : போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எங்கள் கடமை. அதன் அடிப்படையில், விரைவில் இத் திட்டம் செயல்படுத்தபடும். போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, திறமைவாய்ந்த, 100 இளம்போலீசார் போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றப்படவுள்ளனர். இதற்காக,ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவில் உள்ள போலீசாரின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போலீஸ் நிழற்குடைகள் அகற்றப்பட்ட சில இடங்களில், “விபத்து அபாயம் உள்ளதா‘ என, ஆய்வு செய்து, அங்கு மீண்டும் நிழற்குடைகள் வைக்கப்படும். லாரிகள் தங்களுக்குரிய “பார்க்கிங்‘கில் நிறுத்துவது குறித்து, இரண்டு நாட்களில் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். ஒரே போலீஸ்ஸ்டேஷனில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் போலீசார் இடமாற்றப்படவுள்ளனர். கோவை கமிஷனர் அலுவலகம் போல், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகமும் புதிதாக கட்டப் படும். இதற்காக அந்த“மாடலை‘ கேட்டு உள்ளோம். அது கிடைத்தவுடன், அரசுக்கு பரிந்துரைக்கப்படும், என்றார்.