தினமணி 08.02.2010
திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
திருச்சி, பிப். 7: திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஏறத்தாழ 2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது. இரண்டாவது கட்டமாக நடைபெற்ற இந்த முகாமுக்காக மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1270 மையங்களும், மாநகராட்சியில் 216 மையங்களும், துறையூர் நகராட்சியில் 9 மையங்களும், மணப்பாறையில் 24 மையங்களும் என மொத்தம் 1519 மையங்கள் அமைக்கப்பட்டன.
மாவட்ட, மாநகராட்சி அலுவலர்களுடன், தன்னார்வத் தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்று பணியாற்றினர். மாவட்டம் முழுவதும் 2.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஏறத்தாழ 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விடுபட்ட குழந்தைகளுக்காக தொடர்ந்து திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து புகட்டப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.