தினமலர் 26.07.2012
திருச்சி மாநகரத்தில் இன்றும் குடிநீர் ‘கட்’
திருச்சி: பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, திருச்சி மாநகராட்சியின் முக்கியப்பகுதியில் இன்றும் (26ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் இருந்து டர்பைன் நீரேற்று நிலையம் மூலமாக விநியோகம் செய்யும் பிரதான ராட்ஷத உந்துகுழாய், குடமுருட்டி பாலம் அருகே நேற்று முன்தினம் மாலை உடைப்பெடுத்தது.இந்த உடைப்பை சரிசெய்யும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், கம்பரசம்பேட்டை நீர்ப்பணி நிலையத்துக்குட்பட்ட மரக்கடை, விறகுப்பேட்டை, உறையூர், மலைக்கோட்டை, சிந்தாமணி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்றும் (26ம் தேதி) இருக்காது.மேலும், கலெக்டர் வெல் நிலையத்துக்குட்பட்ட தில்லைநகர், அண்ணாநகர், புத்தூர், காஜாப்பேட்டை, கண்டோண்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளில் இன்றும் குடிநீர் விநியோகிக்கப்படாது.நாளை (27ம் தேதி) முதல் வழக்கம்போல குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்கவேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.