தினமணி 18.09.2009
திருப்பரங்குன்றத்தில் ஜனவரி முதல் வைகை குடிநீர் விநியோகிக்க திட்டம்
திருப்பரங்குன்றம், செப். 17: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் நகராட்சியில் வரும் ஜனவரி முதல் வைகை கூட்டு குடிநீர்த் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நகராட்சித் தலைவர் காந்திமதி ராஜேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மக்களுக்காக, விராட்டிபத்து, மாடக்குளம் கண்மாய், தென்கால் கண்மாய் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் தற்போது பெறப்படுகிறது.
தற்போது நடைபெற்றுவரும் வைகை கூட்டுக் குடிநீர் திட்டப் பணி 75 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. வரும் டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, ஜனவரியில் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது என்றார்.
ஜவஹர்லால் நேரு புனரமைப்புத் திட்டத்தின்கீழ் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.12.77 கோடியில் வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டம் கடந்த ஆண்டு பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதன்படி குருவித்துறை பேரணை ஆற்றுப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவுள்ள திருப்பரங்குன்றம் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.